ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஒரு வாழ்க்கை வரலாறு
ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஒரு வாழ்க்கை வரலாறு. அருண் திவாரி. தமிழில்: நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக்.548, விலை ரூ.495.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு. அவரோடு நெருங்கிப் பழகிய நூலாசிரியர், அப்துல் கலாமின் வாழ்க்கையை வெறும் நிகழ்வுகளின் தொகுப்பாகப் பார்க்காமல், அந்த நிகழ்வுகளின் ஊடே அப்துல்கலாம் விட்டுச் சென்ற வாழ்க்கைப் பார்வையை நூல் முழுவதும் இழையோட விட்டிருக்கிறார். அப்துல்கலாமின் இளமைப் பருவம், ஒரு விமானியாக வேண்டும் என்று அவர் கண்ட கனவு நிறைவேறாமல் போனது, ஆனால் அதற்கும் மேலாக விண்வெளித்துறையில் அவர் சாதித்தவை, குடியரசுத்தலைவரான பின்பு மக்களால் நேசிக்கப்படும் தலைவராக அவர் மாறியது என இந்த வாழ்க்கை வரலாறு விரிகிறது.
எதையும் சாதிக்க வேண்டும் என்ற வேகத்துடன் செயல்பட்ட கலாம், “இளைஞர்களுக்குத் துணிச்சல் வேண்டும் என்று விரும்பினார். ” சாத்தியமில்லாதவற்றைக் கண்டுபிடிப்பதற்கான துணிச்சல், பயணிக்கப்பட்டிராத ஒரு பாதையில் பயணிப்பதற்கான துணிச்சல், எட்டப்பட முடியாதவற்றை எட்டுவதற்கான துணிச்சல், பிரச்னைகளைச் சந்தித்து வெற்றி பெறுவதற்கான துணிச்சல்’‘ ஆகியவை இளைஞர்களுக்கு வேண்டும் என விரும்பிய கலாமின் வாழ்க்கை முழுவதுமே துணிச்சலான செயல்களால் நிரம்பியிருப்பதை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.
கலாமின் வாழ்க்கை வரலாற்றைப் படிப்பதன் மூலம், “நான் என்ன செய்ய வேண்டும்?‘’, “நான் ஏன் இங்கு இருக்கிறேன்?’, “வாழ்க்கை என்பது எதைப் பற்றியது?’‘, “என் வாழ்வின் நோக்கம் என்ன? ‘ போன்ற தங்களுடைய சொந்தக் கேள்விகளுக்கான விடைகளை வாசகர்கள் தங்களுக்குத் தாங்களே கண்டுபிடித்துக் கொள்வார்கள்” என்று முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது உண்மை.
நன்றி:தினமணி, 22/8/2016.