அவள் பிரிவு

அவள் பிரிவு, வெ.சாமிநாத சர்மா, சந்தியா பதிப்பகம், பக்.128, விலை ரூ.100.

வெங்களத்தூர் சாமிநாத சர்மா தனது அகவாழ்க்கையிலும் எழுத்துப் பணியிலும் உற்ற தோழியாய் உறுதுணையாய் இருந்த மனைவி மங்களத்தை புற்றுநோய்க்குப் பறிகொடுத்த நிலையில், வேதனையை வெளிப்படுத்தி நண்பரும் பதிப்பாளருமான அரு.சொக்கலிங்கத்துக்கு எழுதிய பத்து கடிதங்களின் தொகுப்பே இந்நூல்.

“ஒளி விளக்கு’ என்ற தலைப்பிடப்பட்டு தொடங்கும் கடிதம் “சங்கற்பம்’ என்ற தலைப்புடன் முடிகிறது. “என் மனைவி இறந்துவிட்டதாக என்னால் எண்ண முடியவில்லை; இருப்பதாகவே என் நினைப்பு. எங்கோ அயலூருக்குப் போயிருப்பதாகவும், திரும்பி வந்துவிடுவாளென்றுமே என் மனம் கருதுகிறது. எப்பொழுதும் அவள் என்னோடு இருக்க வேண்டுமென்பதுதான் என் பிரார்த்தனை. இப்பிறவியில் மட்டுமல்ல. எப்பிறவியிலும்’‘ என்ற ஆசிரியரின் வரிகளில் அத் தம்பதியின் நெருக்கமான அன்பை, உறவை வெளிப்படுகிறது.

மனைவி மீது கொண்டிருந்த நேசத்தை எழுத்தில் பதிவு செய்துள்ள இந்தப் படைப்பு பரிசளிக்கவும், பாதுகாக்கவும் வேண்டிய பொக்கிஷம் என்றால் அது மிகையல்ல. “எங்கள் உறவும் சில நினைவுகளும்‘’ என்ற தலைப்பில் பதிப்பாளர் சொக்கலிங்கம் எழுதியுள்ள கட்டுரையும் நூலில் இடம் பெற்றுள்ளது. சர்மாஜி தம்பதியின் சில புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு.

நன்றி:தினமணி, 22/8/2016

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *