ஆராலும் என்னை அமட்ட ஒண்ணாது
ஆராலும் என்னை அமட்ட ஒண்ணாது, தொகுப்பாசிரியர்: ஆ.அறிவழகன், தமிழ்நாடு வ.உ.சி.ஆய்வு வட்டம், பக்.120, விலை ரூ.100.
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சி. வாழ்வின் பல்துறை சார்ந்த விஷயங்களைப் பற்றிய தெளிவான புரிதலும், கருத்துகளும் உடையவராக இருந்திருக்கிறார். கப்பல் ஓட்டிய தமிழராக, தொழில்முனைவோராக இருந்த அவரே, தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்களின் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தியிருக்கிறார். திருக்குறள் உள்ளிட்ட பல தமிழ்நூல்களைக் கற்றுத் தேர்ந்தவராகவும் இருந்திருக்கிறார். வ.உ.சி.யின் பன்முகத் தன்மையை எடுத்துக் காட்டும்விதமாக பலரால் எழுதப்பட்ட 12 கட்டுரைகள் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
திருமூலர் திருமந்திரத்தில் உள்ள “ஆராலும் என்னை அமட்ட ஒண்ணாது’ என்று தொடங்கும் பாடலே நூலின் தலைப்பாக உருப் பெற்றிருக்கிறது. வ.உ.சி. ஆங்கிலேயர்களுக்கு அடிபணியவில்லை. ஜெயிலர்களுக்கு அடிபணியவில்லை. கொடுஞ்சிறை, வறுமை, கயமை, வஞ்சகம், நோய் என எதற்கும் அஞ்சாமல் அவர் வாழ்ந்தார் என்பதை இந்நூல் விளக்குகிறது.
வேளாண்மை குறித்து பேசும் வ.உ.சி., “கூட்டுப் பண்ணைகள் உருவாக வேண்டும் கூடிப் பயிர்த் தொழில் செய்ய வேண்டும். விளைவிப்பவரே விலை நிர்ணயம் செய்ய வேண்டும்’ என்கிறார். இன்றைக்கும் தேவையான கருத்தாக அது உள்ளது.
“கவர்னர் பணி என்றாலும் சரி அல்லது வெட்டியான் பணியாக இருந்தாலும் சரி, இந்திய தேசத்தைச் சேர்ந்தவர்களே அத்தகைய பணிகளைச் செய்ய வேண்டும்’ என்பது வ.உ.சி.யின் சுதேசியக் கொள்கையின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது.
வ.உ.சி.யின் சுதேசியக் கொள்கை, தொழிலாளர் இயக்கம் குறித்த அவருடைய பார்வை, எவ்வாறு வேளாண்மை செய்ய வேண்டும் என்பதற்கான வ.உ.சி.யின் வழிகாட்டல், பெண்களைப் போற்றும்விதமாக வ.உ.சி. வெளியிட்ட கருத்துகள் என வ.உ.சி.யை இளம் தலைமுறையினர் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினமணி,13/12/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818