ஆதி மருத்துவம்
ஆதி மருத்துவம், ஏகப்பிரியன் மு.இஸ்மாயில், ஏஎம் யோகா அறக்கட்டளை, பக்கம் – 384, விலை ரூ.360.
நோய் வந்து அவதிப்பட்டு சிகிச்சை எடுப்பதைக் காட்டிலும் தடுப்பு மருத்துவத்தின் மூலம் ஆரோக்கிய வாழ்க்கை வாழ முடியும் என்ற கருத்து பரவலாகி வருகிறது. அதன் காரணமாக பாரம்பரிய மருத்துவம், பாரம்பரிய உணவுகள், பாரம்பரிய விவசாயம் என்று மாற்று வாழ்வியலுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் உணவே மருந்து என்ற கோட்பாட்டைக் கடைப்பிடிக்கும் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் சிறப்புகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. நூலின் ஆசிரியர் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பயிற்சியாளர் மற்றும் சிகிச்சையாளர். இவர் தனது 27 ஆண்டு கால அனுபவங்களைத் தொகுத்து நூலை எழுதியுள்ளார்.
திருவள்ளுவர்தான் இயற்கை மருத்துவக் கோட்பாட்டின் ஆதிபகவன். ஏனென்றால் திருவள்ளுவர் "மருந்து' என்ற தலைப்பிட்ட அதிகாரத்தில் உணவைப் பற்றி மட்டுமே கூறிச் சென்றுள்ளார் என்கிறார் ஆசிரியர்.
உலகம் முழுவதற்கும் தடுப்பூசிகளையும், மருந்து, மாத்திரைகளையும் அனுப்பும் அமெரிக்கா, தனது நாட்டு மக்களின் நலத்துக்குப் பெரிதும் இயற்கை மருத்துவத்தையே நம்பி இருக்கிறது. நமது உடலில் நோயென்று எதுவுமில்லை. கழிவின் தேக்கமே நோயாகக் காட்சியளிக்கிறது. தன் உடலை சுத்திகரிக்கத் தெரிந்தவருக்கு எந்த வெளிநாட்டு மருந்துகளும் தேவையே இல்லை.
காய்ச்சல், தலைவலி தொடங்கி கர்ப்பகாலம், சிறுநீரகச் செயலிழப்பு, வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், புற்றுநோய் என அனைத்துக்குமான தீர்வை விளக்கியுள்ளார் ஆசிரியர். மேலும் பழங்கள் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுத்திட்டம், பல்வேறு ஆசனங்கள், குளியல் முறைகள், மூலிகை பொடிகள், மூலிகைச்சாறு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
நன்றி: தினமணி, 5/2/2018.