உச்ச வழு
உச்ச வழு, ஜெயமோகன், நற்றிணை பதிப்பகம், பக். 176, விலை ரூ.200.
நூலாசிரியர் கடந்த இரண்டாண்டுகளில் எழுதிய 10 புதிய சிறுகதைகளின் தொகுப்பு. பெரும்பாலான கதைகள் படிமங்களையும், உருவகங்களையும் பயன்படுத்திப் பேசுகின்றன.
டாப்சிலிப் காட்டுக்குள் பழைய பங்களாவில் செல்லிட பேசியும் இல்லாது தனியாகத் தங்கும் இளைஞனை மையமாகக் கொண்டு நகரும் கதை. அம்மாவின் இறப்புக்குக் கூட நேரில் போக முடியாத கடந்த காலம் அடர்ந்த கானக கும்மிருட்டில் அவனுக்கு நினைவில் வருவது யதார்த்தம்.
பகல் முடியக் கூடாது என்பதற்காக விமானத்திலேயே பயணம் செய்து கொண்டிருக்கும் ஜப்பானியரைப் பற்றிய கதை ‘சூரியனுடன் தொற்றிக் கொள்ளுங்கள்‘ மின்யுகக் கருவைக் கொண்ட படைப்பு ‘ஒரு கணத்துக்கு அப்பால்‘ இதில் தந்தையும் மகனும் பிரதான பாத்திரங்கள். ‘கெய்ஷா‘ கதையில் வரும் விலைமாது, அவளுடன் இருக்கும் கதாநாயகன் இருவரும் கபடமற்ற உள்ளத்தால் வாசிப்புக்குப் பின்னும் மனதில் நீங்கா இடம் படிக்கின்றனர்.
தொகுப்பில் உள்ள படைப்புகள் அனைத்தும் நூலாசிரியரின் தேடலைத் தன்னுள் கொண்டுள்ளன. ஒட்டுமொத்தமாக வாழ்க்கையை நோக்குபவையாகவும், அந்நோக்கை ஒரு கணத்தில் குவிக்க முயல்பவையாகவும் உள்ளன.
நன்றி: தினமணி, 5/2/2018.