சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள்

சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள்,  தொகுப்பாசிரியர் மு.கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம்,  பக்.496, விலை ரூ.600.

சைவ, வைணவ பக்தி இலக்கியங்கள் தமிழுக்கு அளித்துள்ள கொடைகள் அளப்பரியவை. அவற்றுள் சைவத்தைப் பொருத்தவரை காரைக்கால் அம்மையார் (மூன்றாம் நூற்றாண்டு) தொடங்கி சேக்கிழார் (12 ஆம் நூற்றாண்டு) வரை இருபத்தேழு அருளாளர்கள் வழங்கிய "பன்னிரு திருமுறை' சைவ சமயத்தின் கவசமாகவே கருதப்படுகிறது. மேலும் குமரகுருபரர், தாயுமானவர், வள்ளலார், அருணகிரிநாதர் போன்றோரும் சைவத்தால் தமிழையும், தமிழால் சைவத்தையும் மேம்படுத்தியுள்ளனர்.

தமிழ் இலக்கியங்கள் எவ்வகையிலெல்லாம் சைவத்தை வளர்த்தெடுக்க உதவின என்பதை உணர்த்தும்விதமாக அறிஞர்கள் எழுதியுள்ள 78 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். (கட்டுரைகள் சைவத்தமிழ் ஆய்வு மாநாட்டில் படிக்கப்பட்டவை).

இந்நூலிலுள்ள கட்டுரைகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பகுதியில் இடம் பெற்றுள்ள செயற்கரிய செய்த சேக்கிழார், மூவர் தேவாரமும் காவிரியும், திருவாசகத்தின் இலக்கியத்திறன் ஆகிய கட்டுரைகள் பல புதிய தகவல்களை உள்ளடக்கியுள்ளன.

இரண்டாவது பகுதியில் இடம் பெற்றுள்ள திருமூலரின் நிலையாமைக் கொள்கை, திருமந்திரமும் திருக்குறளும், திருமந்திரம் உணர்த்தும் சைவநெறிக் கோட்பாடுகள் போன்ற கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.

மூன்றாவது பகுதியில் உள்ள மங்கையர்க்கரசியாரின் மதிநுட்பம், பட்டினத்தடிகள் வாழ்வும் வாக்கும், அருணகிரிநாதரின் பக்தி மாண்புகள் ஆகியவை செறிவான கட்டுரைகள்.

அறிஞர்கள் பலருடைய கருத்துகளின் தொகுப்பாக இருப்பதால், கருத்துகளில் கூறியது கூறல் காணப்படுவது தவிர்க்க இயலாததே. ஆயினும் ஒரே தலைப்பு ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளில் இடம் பெற்றிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். அச்சுப் பிழைகளும் அடுத்தடுத்த பதிப்புகளில் தவிர்க்கப்பட வேண்டும்.

சைவ சமய வளர்ச்சி குறித்தும், தமிழில் பக்தி இலக்கியப் போக்குகள் குறித்தும் அறிய உதவும் நூல்.

நன்றி: தினமணி,3/9/2018

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *