அல்லல் தீர்க்கும் அமிராமி

அல்லல் தீர்க்கும் அமிராமி, க. துரியானந்தம், கங்கை புத்தக நிலையம், பக்.340, விலை ரூ.225.

சக்தி வழிபாட்டில் பாராயணம் செய்ய, ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம், செளந்தர்யலஹரி, அபிராமி அந்தாதி ஆகிய மூன்றும் மிக முக்கியமானவை. மிகவும் மந்திரசக்தி வாய்ந்த இவற்றைப் பாராயணம் செய்வதன் மூலம் அம்பிகையின் திருவருளைப் பரிபூரணமாகப் பெறமுடியும்.

அம்பிகையின் அருள்பெற்ற அருளாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் அபிராமி பட்டர். இவர், முன்செய் தவத்தாலும், அன்னை அபிராமியின் பெருங்கருணையாலும் ஆட்கொள்ளப்பட்டு, இப்பாமாலையை அருளிச் செய்துள்ளார். 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று அந்தாதி. காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதியே முதல் அந்தாதி. இரண்டாவது, அபிராமி அந்தாதி. இப்பாமாலைக்கு விளக்கவுரை எழுதியிருக்கும் நூலாசிரியர், கி.வா.ஜ.வின் மாணாக்கர்களுள் ஒருவர் என்பதால், அவரது எழுத்துநடை பற்றிக் கூற வேண்டியதில்லை. நூல் நெடுகிலும் தன் ஆசிரியப்பிரானின் மேற்கோள்களை எடுத்துக் காட்டியிருப்பது சிறப்பு.

அம்பிகை மிகவும் பெரியவள், அதேசமயம் தம் பக்தர்களுக்கு எளியவள். அவள் பஞ்சபூதங்களுக்கும் தலைவி. தன் அடியவர்கள் எல்லாம் அவளுக்குப் பிள்ளையாததால், அவள் தராதரம் பார்க்காமல் அனைவருக்கும் அருள் பாலிக்கிறாள். பிரமன், திருமால், ருத்ரன் ஆகிய முதல் மூவர்க்கும் அன்னையாகவும் இருக்கிறாள். பிறவிப் பிணிக்கு அருமருந்தாகவும் இருக்கிறாள். பக்தனின் மனம்தான் அவள் இருக்கும் இடம். பதினான்கு உலகையும் அவள் தனித்தனியே ஆட்சிசெய்கிறாள், அவற்றை அவள் மட்டுமே இயக்குகிறாள். பக்தனின் பக்தி மேலீட்டைக் கண்டு கண் இமைக்கும் நேரத்தில் அவன் மனத்தில் தோன்றி மறைகிறாள். இப்படிப்பட்ட அன்னையின் அருமை, பெருமைகளை எல்லாம் இந்நூல் விரித்துரைக்கிறது. சக்தி வழிபாடு செய்வோரிடம் இருக்க வேண்டிய அருமருந்து இந்நூல்.

நன்றி: தினமணி, 12/3/2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *