ஆனைமலைக் காடர்கள்

ஆனைமலைக் காடர்கள், முனைவர் ஜே.ஆர்.லட்சுமி, மதன் மோனிகா பதிப்பகம், பக். 164, விலை 300ரூ.

உலகில் மிகவும் தொன்மையானவர்கள் என்று கருதப்படும் ஆதிகுடியினர் இன்றும் காடுகளில் மலைவாழ் மக்களாகவே வசித்து வருகின்றனர்.

தமிழகத்தில் ஆனை மலையில் வாழும் காடர்கள் இன்றைய நாகரிகம் வளர்ந்த நிலையிலும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில், அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்கின்றனர். அவர்களின் வரலாறும் தொன்மையும் வாய்மொழிச் சான்றுகளாகவே உள்ளன.

சுதந்திர இந்தியாவில், இன்னும் சுதந்திரம் அடையாதவர்களாக வாழும் காடர்களின் வாழ்க்கையை களஆய்வு செய்து உணர்வுபூர்வமாகப் படைக்கப்பட்ட நுால் இது.

ஜவ்வாது மலைப்பழங்குடி மக்கள் வாழ்வியல், வால்பாறைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் போன்ற வனம் சார்ந்த மக்களின் வாழ்க்கை முறைகளைக் களஆய்வு செய்து நுாலாக்கியதைத் தொடர்ந்து, ஆனைமலைக் காடர்கள் வாழ்க்கையை அரிய தகவல்களோடு அத்தியாயப்படுத்தி பதிவு செய்திருக்கிறார் பேராசிரியர், முனைவர் ஜெ.ஆர்.லட்சுமி.

பழங்குடிகளில் தொன்மையானவர்கள் என்று கூறப்படும், ‘ஆதிக்குடி’ தென்னிந்தியக் காடுகளில் வேட்டையாடி வாழ்கின்றனர். ஆனைமலைக் காடர் கள், வடகேரளத்து குகைகளில் வாழ்ந்த சோளநாயக்கன் பிரிவினர், குகைவாசிகள் மற்றும் ஆலார் வகையினர், ஆந்திரப்பகுதிகளில் செஞ்சுக்கள் போன்றோர் தொன்மைக்கூறுகள் கொண்டவர்கள் என்பதையும், இந்தியாவிலேயே மிகப்பழமையானவர்கள் காடர்கள் என்பதையும் அறிய முடிகிறது.

ஆனைமலைப் பகுதி யில் பலரும் குடியேறியதாகக் கூறினாலும், செட்டில்மென்ட் எனப்படும் ஈத்தகுழி, கவர்கல், அனலி, எருமைப்பாறை, பல்வேறு ஒதுக்கப்பட்ட இடங்களில் வாழும் காடர்களின் வாழ்விடங்கள்.

குடிசைகளின் அமைப்பு, உருவ அமைப்புகள், உணவுமுறைகள், உடை வகைகள், மொழிகள், தெய்வ பக்தி, பல வகையான வழிபாட்டு முறைகள், திருமண முறைகள், போன்றவை எளிய நடையில் தரப்பட்டுள்ளன.

வாழ்நாள் சடங்குகள், ஈமச்சடங்குகள், நம்பிக்கைகள், பேசும் முறை, அவர்கள் பயன்படுத்தும் கருவிகள், ஆயுதங்கள், பொருட்கள், காடர்களின் செயல் திறன்கள் போன்றவை விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றன.

அந்நியர் நெருங்க முடியாத தொலைவில் முற்றிலும் மூங்கிலால் ஆன வீடுகள், ஒவ்வொரு நாளும் இரவுக்காவல்கள் என்று நடத்தும் மாறுபாடான வாழ்க்கை இன்னமும் தொடர்கிறது.

பழங்குடி, முதுகுடி, தொல்குடி என வகைப்படுத்தப்பட்டு, இன்றைய நவீன உலகிலும் தமக்கென ஒரு மொழி, பண்பாடு, பழக்கவழக்கம் என வரையறுத்துக்கொண்டு தனித்தொதுங்கி வாழ்பவர்கள் காடர்கள்.

காட்டுக்குள் வாழ்வதைத் தமது உரிமையாகவும், பெருமையாகவும் நினைக்கும் ஆனைமலைக்காடர்கள், வரலாற்றுக்கும் முற்பட்ட காலத்தவர்களாகவே கருதப்படுகின்றனர்.

தமக்கென்று இசை, பாட்டு, நடனம் போன்றவற்றில் நாட்டம் கொண்டு, தமக்கென்று தயாரிக்கும் இயற்கை மருத்துவத்தைக் கையாண்டு, வனதேவதையைக் குலதெய்வமாகக் கொண்டு தெய்வபக்தி மிக்கவர்களாக வாழ்கின்றனர். தமக்கான கல்வி வசதிகள், இட ஒதுக்கீடுகள் பற்றி எதுவும் அறியாமல் உள்ளனர்.

இப்போதும் காடர் இனத்துக் குழந்தைகளுக்குப் பிறப்புச் சான்றிதழ் கிடைப்பதில்லை என்பதும் இளகிய மனதோரை நெகிழ வைக்கும். நுாலில் பல்வேறு தகவல்களோடு, ஏராளமான நிழற்படங்கள் காடர்களைப்பற்றி விபரமாக அறிந்து கொள்ள உதவுகின்றன.

–மெய்ஞானி பிரபா

நன்றி: தினமலர், 12/11/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *