அறிவு வழிகள்

அறிவு வழிகள், பேகன் கட்டுரைகள், தமிழில் முகில்வண்ணன், சாகசம், பக்.280, விலை ரூ.250.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்  என்றார் மகாகவி பாரதியார். இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்ட மறுமலர்ச்சி காலத்தின் குழந்தை என கருதப்பட்ட பிரான்சிஸ் பேகனின் 60 கட்டுரைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன.

பிரான்சிஸ் பேகன் வாழ்ந்த காலத்தின் சமூக நிலைமைகளுக்கேற்ப அக்கால வாழ்வியல் விழுமியங்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் புது ஒளி பாய்ச்சும்விதமாக பேகன் தனது கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்.

உண்மை, மத ஒற்றுமை, பழியுணர்ச்சி, பொறாமை, காதல், திருமணம், பிரம்மசரியம், துணிவு, நல்லியல்பு, தாமதம், வஞ்சகம், தன்னலம், நட்பு, புறந்தூய்மை, அழகு, இளமை, முதுமை, வீண் பெருமை, கெளரவம், சினம், புகழ், மூட நம்பிக்கை, நாத்திகம், பேராசை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த பிரான்சிஸ் பேகனின் கருத்துகளை நாம் தெரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது.

பழி வாங்குவதைப் பற்றிய நினைத்துக் கொண்டிருப்பவனின் காயங்கள் ஆறவே ஆறாது. அதை மறந்துவிட்டவனின் காயங்கள் விரைவில் ஆறிவிடுகின்றன. உண்மையான திறமைசாலிகள், வெளிப்படையாகவும், திறந்த மனத்துடனும் செயல்படுவர், பணம் எரு போன்றது; அதைக் கலைத்துப் பரவலாகத் தூவாமல் இருப்பது நல்லதல்ல, மூட நம்பிக்கைகளைத் தவிர்ப்பதிலும் ஒரு மூட நம்பிக்கை உள்ளது. ஏற்கெனவே பின்பற்றப்படும் மூட நம்பிக்கைகளை விட்டு விலகினால், சிறப்பாகச் செயல்படவியலும் என நினைப்பதும் ஒரு மூடநம்பிக்கைதான் – இவ்வாறு பேகனின் இக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய பல கருத்துகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

நன்றி: தினமணி, 12/2/2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *