காந்தி வழியது உலகம் – காந்தியத்தின் உலகளாவிய தாக்கம்

காந்தி வழியது உலகம் – காந்தியத்தின் உலகளாவிய தாக்கம், முதல் தொகுதி. இராம் பொன்னு, சர்வோதய இலக்கியப் பண்ணை, பக்.224, விலை ரூ.150.

மகாத்மா காந்தியின் சிந்தனைகள் உலக அளவில் ஏற்படுத்திய தாக்கத்தைக் கூறும் நூல். கான் அப்துல் கஃபார் கான், மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, தலாய் லாமா, ஆங் சான் சூ கி, லான்சா டெல் வாஸ்டோ (சாந்திதாஸ்), சீசர் எஸ்ட்ரடா சாவெஸ், லெக் வலெசா ஆகியோர் மக்களுக்காக உலக அளவில் போராடியவர்கள்.

அவர்கள் பல்வேறு போராட்ட வழிமுறைகளைப் பின்பற்றினாலும் அவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டதாக காந்தியம் இருந்திருக்கிறது என்பதை இந்நூல் விளக்குகிறது. அவர்களின் வாழ்க்கை வரலாறு – போராட்ட வரலாற்றின் வழியாக இது விளக்கப்படுகிறது.

இன்றைய குழந்தைகளுக்கும் உலகிற்கும் வழங்கும் செய்தி- அகிம்சையை ஏற்று நடந்தால், அணுகுண்டு பற்றி பேசிக் கொண்டிருக்கும் நாம் அழிவிலிருந்து தப்பிக்கலாம். அமைதி வாழ்வில் திளைக்கலாம் என கான் அப்துல் கஃபார் கான் கூறியிருக்கிறார்.

மனித இனம் போருக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையேல் போர் மனித இனத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்று கருப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடிய மார்டின் லூதர் கிங் கூறியது, கோபக்கார இளைஞராக சிறை சென்ற நெல்சன் மண்டேலா, சிறையிலிருந்து விடுதலையாகி வெளிவரும்போது எவரையும் மன்னிக்கும் மனோபாவம் கொண்டவராய் – அகிம்சை நெறியில் நடை பயில்பவராய் விளங்கியது, திபெத்திய, பெளத்தப் பண்பாட்டை, அதாவது அமைதி மற்றும் அகிம்சை பண்பாட்டை பாதுகாக்கப் பணியாற்றுவது தனது தலையாய கடமை; என்று தலாய் லாமா குறிப்பிட்டது, அகிம்சை இயக்கம் மூலமான மாற்றத்தை காந்திக்கு முன்னதாக உலகில் எவரும் கொண்டு வரவில்லை.

காந்திதான் வன்முறை ஏதுமின்றி அகிம்சை வழி புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதை ஆரம்பித்து வைத்த பெருமைக்குரியவர் ஆங் சான் சூ கி கூறியது, ஆயுதங்களோடு நாங்கள் போராட முயற்சிக்கையில் தோல்வியையே தழுவினோம்; ஆனால் அகிம்சையை நாங்கள் ஏற்றுப் போராடிய போது வெற்றி பெற்றோம். நான் மகாத்மா காந்தியின் சீடன் என்று போலந்து நாட்டின் லெக் வலெசா கூறியது எல்லாம் உலக அளவில் காந்தியத்தின்தாக்கம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை நமக்குச் சுட்டிக் காட்டுபவையாக உள்ளன. காந்தியத்தின் புகழ் பரப்பும் நூல்.

நன்றி: தினமணி, 12/2/2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *