அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கை
அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கை, தொழிற்சங்க மாமேதை சக்கரை செட்டியார், கே.சுப்ரமணியன், வெளியீடு: ஏஐடியுசி, (சரோஜினி பதிப்பகம் மூலமாக), விலை: ரூ.80
கட்டற்ற வேலை நேரம், அன்றாட அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தொழிலாளர்கள் உழன்றுகொண்டிருந்த நேரத்தில்தான் இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான ‘மெட்ராஸ் லேபர் யூனியன்’ 1918 ஏப்ரல் 27-ல் உருவானது. திரு.வி.க., சிங்காரவேலர், வ.உ.சி., பி.பி.வாடியா ஆகியோர் முன்முயற்சியில் சென்னையில் தொடங்கப்பட்டபோது, அதன் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வழக்கறிஞரான சக்கரைச் செட்டியார்.
தன் வாழ்நாள் முழுவதையுமே தொழிலாளர் நலன் காக்க, தொழிற்சங்கங்களை உருவாக்கிச் செயல்படுத்தினார் அவர். பஞ்சாலை, மின்னுற்பத்தி – விநியோகம், மண்ணெண்ணெய் விநியோகம், டிராம்வே, ரயில்வே, அலுமினியப் பாத்திரங்கள் உற்பத்தி, தோல் பதனிடுதல், அச்சகங்கள், பெரும் பொறியியல் பட்டறைகள் ஆகியவற்றில் சங்கங்களை உருவாக்கினார்.
1940-41-ல் சென்னை மேயராக இருந்தபோது, சென்னையில் வந்து குவிந்த பர்மா அகதிகள் சொந்தக் காலில் நிற்க அவர் உருவாக்கியதுதான் கடற்கரை ரயில்நிலையம் அருகேயுள்ள பர்மா பஜார். தொழிற்சங்கப் பணிகள் மட்டுமின்றி விடுதலைப் போராட்ட காலத்தில் காந்தி நடத்திய எண்ணற்ற அறவழிப் போராட்டங்களில் தொழிலாளர்கள் பெருந்திரளாகப் பங்கேற்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏஐடியுசி) நூற்றாண்டு தொடங்கியுள்ள தருணத்தில், தமிழகத் தொழிலாளர் இயக்க முன்னோடியான சக்கரை செட்டியாரின் வாழ்க்கைச் சித்திரத்தை வழங்கியுள்ள வழக்கறிஞர் கே.சுப்ரமணியனைப் பாராட்டத்தான் வேண்டும். நாம் வந்த வழியைத் தெரிந்துகொள்ள உதவும் நூல்.
– வீ.பா.கணேசன்
நன்றி: தமிழ் இந்து
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818