அருந்தவச் செல்வர் அரிராம் சேட் சின்னராசு
அருந்தவச் செல்வர் அரிராம் சேட் சின்னராசு, முத்தப்பா, யூகே மேக்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.272, விலை ரூ.200.
த.பி.சொக்கலால் ராம்சேட் பீடி நிறுவனத்தை நடத்திய த.பி.சொக்கலால் ராம்சேட்டின் வரலாறு இந்நூலின் முதல் பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகு அவருடைய மகன் அரிராம் சேட்டின் வரலாறு நூல் முழுக்க மிகச் சுவையாக விவரிக்கப்பட்டுள்ளது.
அரிராம் சேட் சிறுவயதிலேயே கார்களின் மீது அளவுக்கதிகமான காதல் கொண்டிருந்தது, இளைஞனாக ஆன பிறகு பல மாடல்களில் பல நவீனமான கார்களை வாங்கிப் பயன்படுத்தியது, தன்னிடம் வேலை செய்பவர்கள், தன்னுடைய உறவினர்களுக்கு மட்டுமல்லாமல், எல்லாருக்கும் வள்ளலாக அவர் இருந்தது, புகழ்பெற்ற நடிகர், பாடகர் தியாகராஜ பாகவதரின் ரசிகராக இருந்தது, இசை கற்றுக் கொண்டது, பாகவதருடன் சேர்ந்து கச்சேரி செய்தது, பாகவதர் கஷ்டப்பட்ட காலத்தில் அவருக்கு மாதம் ஒன்றுக்கு அந்தக் காலத்திலேயே ரூ.5000 பண உதவி செய்தது என அரிராம் சேட்டின் வித்தியாசமான பண்புகள் வியக்க வைக்கின்றன.
யானைக்கு அல்வா வாங்கிக் கொடுத்தது, யானைகளின் பாதங்கள் கல்லில், முள்ளில் பட்டு பாதிக்கப்படாமல் இருக்க அவற்றுக்கு பூட்ஸ் செய்து கொடுத்தது, வேட்டையில் ஆர்வமுடையவராக இருந்தது என அரிராம் சேட்டின் வாழ்க்கைச் சம்பவங்கள் நம் மனதைக் கவர்கின்றன.
சினிமா நடிகர், நடிகைகளுடன் அரிராம் சேட் கொண்டிருந்த நட்பு, காமராஜ் உட்பட பல அரசியல் தலைவர்களுடன் அவருக்கிருந்த பழக்கம் என வித்தியாசமான ஒரு மனிதரை இந்நூல் நமக்கு அறிமுகப்படுத்துகிறது.”,
நன்றி: தினமணி, 11/2/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818