ஆழ்வார்களின் சிந்தனைகள் 2 பகுதிகள்

ஆழ்வார்களின் சிந்தனைகள் 2 பகுதிகள், பேரா.ஜய.குமாரபிள்ளை, சங்கர் பதிப்பகம், பக். 368+624, விலை 300ரூ+550ரூ.

கி.பி., மூன்றாம் நுாற்றாண்டிற்குப் பின், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த களப்பிரர்களாலும், பல்லவர்களாலும், சமணம் மற்றும் பவுத்த சமயங்கள் பரவியதுடன், அவர்களின் பிராகிருத மொழி இங்கு ஆட்சி மொழியாக இருந்ததால், தமிழ்மொழியும், தமிழரின் சமயங்கள், இல்லற மாண்புகள், அகப்பொருள் இலக்கிய மரபுகள், இசை, கூத்து முதலியன சிதைந்தனவென்று அறிஞர்கள் கூறுவர்.

அங்ஙனம் பிற மதங்களின் கட்டுப்பாட்டில் சிக்கியிருந்த தமிழகத்தை மீட்டெடுக்கவே, சைவ -வைணவப் பெரியோர்கள், பக்தி இயக்கத்தைத் தோற்றுவித்தனர் என்பர்.
கி.பி., ஏழாம் நுாற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நுாற்றாண்டு வரை வளர்ந்த இப்பக்தி இயக்கத்தால் நாயன்மார்கள், ஆழ்வார்களின் தொண்டால், தமிழ்மொழி மங்காமல் வளர்க்கப்பட்டது.

இந்நுால், 12 ஆழ்வார்களின் வாழ்க்கை வரலாறு, பாசுரங்களின் இனிய விளக்கம், பாசுரங்களில் உள்ள நயங்கள், பாசுரங்களின் கருத்துகளைப் பிற இலக்கியங்களோடு ஒப்பிடுதல், ஒவ்வொரு ஆழ்வார்களின் இன்றியமையாத பணிகளையும் சுட்டிக்காட்டுதல் ஆகியவை, படிப்போர் நெஞ்சத்தைக் கவரும் என்பதில் ஐயமில்லை.

தமிழரின் அகப்பொருள் துறையைப் பக்திக்கு மடைமாற்றம் செய்த ஆழ்வார்களின் பெருமையையும், அந்தாதிப் பாசுரங்களைப் படைத்து இலக்கிய மரபை வைணவத்திற்குத் தந்த அழகும், சங்ககாலத்துப் பொய்கையாரிடமிருந்து, பொய்கையாழ்வாரை வேறுபடுத்தி விளங்கிக் கூறுகிறது.

ஒவ்வொரு ஆழ்வாரின் இன்றியமையாத பாசுரங்களை நயமுடன் விளக்கி, இறுதியில் அவ்வாழ்வாரின் சிறப்புகளை வரிசை எண் இட்டுக் கூறுவதும், ஆழ்வார்களின் பாசுரங்கள் மட்டுமின்றி, அதனுடன் தொடர்புடைய வைணவம், சைவம் சார்ந்த நுால்களின் பாடல்களையும் ஒப்பிடுவதும், நுாலாசிரியரின் நுண்மாண் நுழைபுலத்தின் மேன்மை கண்டு வியக்கிறோம்.

இந்நுாலாசிரியர் தாம் கூறும் கருத்திற்கு, மற்ற அறிஞர்களின் நுால்களைத் துணையாகக் குறிப்பிடுவதும், பரிமேலழகர், திருக்குறளின் இறைமாட்சி அதிகாரத்தில், நம்மாழ்வார் பாசுரத்தை மேற்கோள் காட்டியுள்ளார் என்று இவர் விளக்குவதும் (பக். 312) சிறப்பு.

திருமங்கையாழ்வாரின், ‘தெட்டபழம்’ என்ற சொல்லாட்சியை விளக்கி இச்சொல்லை திருமங்கையாழ்வார் மட்டுமே பயன்படுத்தி உள்ளார் என்று கூறுவதும் (பக். 577), திருமங்கையாழ்வார் திருவேங்கடவன் குறித்து, 58 பாசுரங்களும், நம்மாழ்வார், 43 பாசுரங்களும் பாடியுள்ளனர் என்று பகுத்துக் கூறுவதும் (பக். 616), இந்நுாலாசிரியரின் ஆழ்ந்த அகன்ற புலமைக்குச் சான்றுகளாகும்.

மிக எளிய பழகு தமிழில், மொத்தமுள்ள, 992 பக்கங்களில், ஒரு இடத்தில்கூட பிழையில்லாது அச்சிட்டிருப்பதும், படிக்கத்தக்க எழுத்து வடிவில் நுால் உருவாகியிருப்பதும், நுாலிற்கு மேலும் பெருமை சேர்க்கின்றன.

தமிழர் இல்லங்களிலும், நுாலகங்களிலும், தவறாது இருக்க வேண்டிய அருமையான நுால்.

–பேரா., டாக்டர் கலியன் சம்பத்து

நன்றி: தினமலர்,17/3/19,

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *