சிச்சிலி
சிச்சிலி, லீனா மணிமேகலை, நற்றிணை பதிப்பகம், விலை 100ரூ.
லீனாவின் 100 காதல் கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. கவிதை உலகின் எந்த நிலப்பரப்பையும் கடந்து வெளிவரக்கூடிய அசாத்திய திறமை கூடிய கவிதைகள்.
வாழ்வின் எந்த ரகசியங்களுக்குள்ளும் அகப்படாத காதலின் பக்கங்கள் வீரியமாகத் தொகுக்கப்பட்டு இருக்கின்றன. அனுபவப்பட்ட, துரோகத்தில் இழைந்த, பிரியப்பட்ட காதலின் உணர்வுகளைப் படிக்க நேர்வதே ஒரு அனுபவம். இதுவரை நாம் கண்டுவந்த காதலின் பிதற்றலான பக்கங்கள் துறக்கப்பட்டு, ரத்தமும் சதையுமான உண்மை முன்வைக்கப்படுகிறது.
படிக்கும்போது லீனாவோடு உரையாட முடிகிறது. அவரிடம் பாசாங்குகள் இல்லை. ஒரு மெல்லிய தென்றலைத் தீண்டுவதற்கு வந்தால், நீங்கள் ஏமாறப்போவது நிச்சயம். தற்செயலாக ஒரு மின்னோட்டமுள்ள கம்பியைத் தொடுவது போன்றது.
நீங்களாக விரும்பித் துணிந்து அதைத் தொடுவதற்கு வெகுவாக அஞ்சுவீர்கள். ஆனால் இந்தக் கவிதைகள் முற்றிலும் தற்செயலாக உங்களைத் தொடுகின்றன. எல்லாவற்றையும் சுட்டெரித்துவிடுகின்றன.
நன்றி: குங்குமம், 7/10/2016.