கிளியோபாட்ரா
கிளியோபாட்ரா, எஸ்.எல்.வி.மூர்த்தி,சிக்ஸ்த் சென்ஸ், விலை: ரூ.288
இரும்புப்பெண்மணி
கிரேக்க, ரோமானிய வரலாறுகள் பின்னிப் பிணைந்தவை. வெவ்வேறு மொழி, மத நம்பிக்கைகள், கடவுளர்களைக் கொண்ட இந்த நாடுகளை இப்படி சம்பந்தப்பட வைத்தது எது? ரோமைச் சேர்ந்த சீஸர், அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த ஆன்டனி இருவரும் சந்தித்த மிகப் பெரிய ஆளுமை எகிப்து நாட்டு அரசி கிளியோபாட்ரா. ‘இளம் வயதிலேயே மிகப் பெரிய அறிஞர்களிடம் கணிதம், தத்துவம், வானியல், சோதிடம், ரசவாதம் உட்பட அனைத்தையும் தீர்க்கமாகக் கற்ற அவர், குதிரைச் சவாரி, வாள் வீச்சு, ஈட்டி எறிதல், போர் நடத்தும் முறை என்று அனைத்திலும் வல்லவரானார். எகிப்திலும் கிரேக்கத்திலும் பக்கத்து நாடுகளிலும் வாழும் மக்கள் பேசும் கிரேக்கம், காப்டிக், சிரியாக், அரபி, ஹீப்ரு, மெடியன், பார்த்தியன், அம்ஹாரிக், ட்ரோக்ளைட் உள்ளிட்ட மொழிகளைக் கற்று, சரளமாக உரையாடும் வல்லமை பெற்றார். நிறைய நூல்களைப் படித்தார். மக்களுடைய குறைகளை நேரடியாகவே கேட்டுத் தெரிந்து களைந்து அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார். நாட்டின் கல்வி, கலை, கலாச்சாரம், விளையாட்டுத் திறன், போர்க்கலை சிறக்க நடவடிக்கைகள் எடுத்தார். பொருளாதாரம் சிறக்க கனிமங்களை அகழ்ந்தெடுத்து விற்பதன் மூலம் தங்கம், வெள்ளி ஈட்டி அதைச் செலவிட்டு நாட்டை வளப்படுத்தினார்.
ரோமாபுரியின் ஜூலியஸ் சீஸரையும், அவருக்குப் பின் ஆட்சி செய்த ஆன்டனியையும் தனது அழகாலும் அறிவாலும் வீழ்த்தி எகிப்தை ரோமாபுரி இணைத்துக்கொண்டுவிடாமல் தடுத்தவர் கிளியோபாட்ரா. வானியல் அறிவைப் பயன்படுத்தி, ஆண்டுக்கு 10 மாதங்களாக இருந்ததில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களைச் சேர்த்து ஜூலியஸ் சீஸர் 12 மாதங்களாக்க கிளியோபாட்ராதான் காரணம் என்பது அரிய தகவல்.
அரசவைக்கு வரும் வெளிநாட்டு வர்த்தகர்களையும் ராஜதந்திரிகளையும் வரவேற்று அவரவர் மொழிகளிலேயே பேசி உடனுக்குடன் முடிவெடுத்துச் செயல்படுத்தும் வல்லமை அவருக்கு இருந்தது. ஆலோசகர்கள் தேவையின்றி முடிவெடுக்கும் அளவுக்கு எல்லாத் துறைகளையும் அறிந்திருந்தார். ஒற்றர்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தினார்.
எகிப்தியர்களின் தாய்மையைக் குறிக்கும் தெய்வம் ஐஸிஸ்; அவர் நீண்ட உடலோடு ஒட்டிய ஆடையணிந்திருப்பார், தலையில் ஒரு சூரிய வட்டமும் பசுவின் இரண்டு கொம்புகளும் இருக்கும், இரு கைகளிலும் நல்ல பாம்புகள், கையில் குழந்தையும் உண்டு. இந்தத் தெய்வத்தின் அலங்காரத்தை அப்படியே கிளியோபாட்ராவும் செய்துகொள்வார். மக்கள் அவரை புதிய ஐஸிஸ் என்றே வழிபட்டார்கள்’ என்று கிளியோபாட்ரா குறித்து இந்நூலாசிரியர் தரும் சித்திரம் ஆச்சரியமளிக்கிறது.
நன்றி: தமிழ் இந்து, 3/10/20
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030344_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818