தத்வமஸி
தத்வமஸி – மகாவாக்கிய விளக்கம், க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக்.112, விலை ரூ.150.
உன்னத ஞானம் – மோட்சம் கிட்டச் செய்யும் தத்துவ சிந்தனைக்கு வழி வகுக்கிற சொற்றொடர் மஹாவாக்யம் என்று அறியப்படுகிறது. வேதங்களிலும் உபநிஷத்துகளிலும் ஏராளமான மஹாவாக்யங்கள் காணக் கிடைக்கின்றன. இவை உயரிய ஞானத்தைப் பெற எளிய வழியாகக் கருதப்படுகின்றன.
வேதத்துக்கு ஒன்று என்ற அளவில், ஹைந்தவ தத்துவ விசாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் குறிப்பிடத்தக்கவையான, பரவலாகப் பலரும் கேள்விப்பட்டிருக்கக் கூடிய, மஹாவாக்யங்கள் நான்கு பிரஜ்ஞானம் பிரஹ்மா என்கிற மஹாவாக்யம், ரிக் வேதத்தில் அடங்கிய ஐதரேய உபநிஷத்தில் காணப்படுகிறது.
சாம வேதத்தின் சாந்தோக்ய உபநிஷத்தில் காணப்படும் மஹாவாக்யம் தத்-த்வமஸி யஜுர் வேதத்தில் அடங்கியுள்ள பிருஹதாரண்யக உபநிஷத்தில் காணப்படும் மஹாவாக்யம் அஹம் பிரஹ்மாஸ்மி அதர்வண வேதத்தின் கீழ் காணக் கிடைக்கும் மாண்டூக்ய உபநிஷத்தில் உள்ள மஹாவாக்யம், அயம் ஆத்மா பிரஹ்மா வேதாந்தம் பயிலும் கிரமத்தில், இவை முறையே, லக்ஷண வாக்யம், உபதேச வாக்யம், அனுபவ வாக்யம், அநுசந்தான வாக்யம் என்று அறியப்படுகின்றன.
ஆத்மா, பரப்பிரம்மத்தைப் பற்றி அறிய, ஞானம் பெற்று முக்தி அடைய இது போன்ற மஹா வாக்கியங்கள் உதவுகின்றன. இதில் தத்-த்வமஸி என்கிற மஹாவாக்யம் பற்றி நூலாசிரியரின் கேள்வி ஞானத்தில் உருவாக்கியிருக்கும் புத்தகம்தான் தத்வமஸி- மகாவாக்கிய விளக்கம் என்கிற புத்தகம். தத்-த்வம்-அஸி என்பதன் நேர் தமிழாக்கம் நீ அதுவாகிறாய் அது என்பது பரம் பொருள், பெரும் பொருள், அகண்ட பொருள் என விரிகிறது.மூலமும் உரையும் இயற்றியதாக ஆசிரியர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூலில் உள்ள சம்ஸ்கிருத மூலச் செய்யுள்கள் ஆதிசங்கரரின் வாக்யவிருத்தியாகும்.
ஆதிசங்கரர் காலம், அவர் இயற்றிய நூல்கள் மிகுந்த ஆழமான ஆராய்ச்சிக்கு உள்பட்டவை.ஸ்வாமி தயானந்த சரஸ்வதியின் ஆங்கில உரைகளைக் கேட்ட அனுபவத்தில் இந்த நூலை வடித்துள்ளதாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். கடினமான விளக்கங்களுக்கு இடையே ஆங்காங்கே, ஜனரஞ்சகமான மொழியையும் புகுத்தி எழுதியுள்ளார். நல்ல முயற்சி.
நன்றி: தினமணி, 22-4-19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818