எனக்கு மட்டுமே தெரிந்த எம்ஜிஆர்
எனக்கு மட்டுமே தெரிந்த எம்ஜிஆர்., ஜானகி எம்ஜிஆர்., தாய் வெளியீடு, பக்.152, விலை குறிப்பிடப்படவில்லை;
தாய் வார இதழில் எம்.ஜி.ஆர்.குறித்து அவரது மனைவி ஜானகி எழுதிய தொடரின் தொகுப்பே இந்நூல்.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் குறித்து எத்தனையோ நூல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் எம்ஜிஆரின் மனைவி என்கிற முறையில் ஜானகி எழுதியுள்ளதால் உணர்வுபூர்வமாக மட்டுமல்லாது பல்வேறு அரிய தகவல்கள், புகைப்படங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
கர்நாடக இசையை திரைப்படங்களில் ஒலிக்கச் செய்த பாபநாசம் சிவனுக்கு நடந்த பாராட்டு விழாவில் அவரது தொண்டை பாராட்டி நிதி வழங்கி அவரது பாதத்தைத் தொட்டு எம்ஜிஆர் வணங்கியுள்ளார். காஞ்சிப் பெரியவரை சந்தித்த எம்ஜிஆர், அதை உணர்ச்சிபூர்வமாக ஜானகியிடமும் விவரித்துள்ளார்.
காமராஜரின் அமைச்சரவையில் இடம்பெற்ற கக்கனின் மனைவி வறுமையில் வாடியபோது அவரது வாழ்நாள் முழுவதும் கெளரவமான வாழ்க்கை நடத்த அன்றைய முதல்வராக இருந்த எம்ஜிஆர் உதவி செய்துள்ளார். யார் ஆட்சிக்கு வந்தாலும் கக்கனின் மனைவிக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் உத்தரவும் பிறப்பித்தார்.
தொல்காப்பியம், புராண, இதிகாசங்களில் ஆழ்ந்த புரிதலுடைய எம்ஜிஆர் தீவிர வாசிப்புப் பழக்கமுடையவர். தத்துவ நூல்களில் மிகுந்த ஆர்வமுடையவர். சீட்டாட்டம், கேரம், வேட்டையாடுதலிலும் எம்ஜிஆருக்கு ஆர்வம் இருந்துள்ளது.
நடிகராக இருந்தபோதும் சரி, முதலமைச்சராக இருந்தபோதும் சரி, ஈகை, இரக்க குணத்துடன் தன் வாழ்நாள் முழுவதும் மனிதநேயராக எம்ஜிஆர் வாழ்ந்தார் என்பதை இந்நூல் பதிவு செய்துள்ளது.
நன்றி: தினமணி 22/11/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818