ஈடேற்றும் சமத்துவம்

ஈடேற்றும் சமத்துவம்,  பிரபா ஸ்ரீதேவன், தமிழில்: ஸ்ரீ.சம்பத்,நீதிபதி சிவராஜ் வி.பாட்டீல் பவுண்டேசன், பக்.174, விலை ரூ.200.

நூலாசிரியர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்தது. அந்நூலில் உள்ள கட்டுரைகளின் தமிழாக்கமும், நூலாசிரியர் ஆற்றிய உரைகளும், தினமணியில் வெளிவந்த கட்டுரைகளும் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

சமத்துவம் தேவை என்கிற அடிப்படையில் நம் சமூகத்தில் சமத்துவம் மறுக்கப்பட்டவர்களான மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள், சாதிரீதியாக மலக்கழிவுகளை அள்ளும் தொழிலுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள், பெண்கள் ஆகியோரின் மனித உரிமைகள் எவ்வாறெல்லாம் மறுக்கப்படுகின்றன; அவர்களுடைய மனித உரிமைகளை அவர்களுக்கு எவ்விதம் மீட்டெடுத்துக் கொடுப்பது என்று ஆராயும் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்திருக்கிறது.

பசு வதையை எதிர்ப்பது என்ற பெயரில் மனிதர்களை வதை செய்வது சரியில்லை என்று ஒரு கட்டுரை சொல்கிறது. மனிதர்களின் தனிஉரிமைகள் மதிக்கப்பட வேண்டும்; தொழில்நுட்ப வளர்ச்சி மனிதனின் தனி உரிமைகளை அழித்துவிடக் கூடாது என்று இன்னொரு கட்டுரை சொல்கிறது.

பெண்களுக்கு இழைக்கப்படும் பல்வேறு கொடுமைகள், சக மனித உயிராக அவர்கள் மதிக்கப்படாதது, வேலைக்குச் செல்லும் பெண்கள் வீட்டிலும் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம், வேலை செய்யும் இடங்களிலும், வெளியிலும் பெண்கள் சந்திக்க வேண்டிய பாலியல் துன்புறுத்தல்கள் என பெண்களின் உரிமை மீறல் தொடர்பாக நூலாசிரியரின் தெளிவான கருத்துகள் பல கட்டுரைகளில் இடம் பெற்றுள்ளன.

பாலியல் துன்புறுத்தல் என்பது வெறும் பாலியல் துன்புறுத்தல் மட்டும் ஆகாது. "பாலியல் துன்புறுத்தல் என்பது அதிகாரத்தின் வெளிப்பாடு. அது பாகுபாட்டின் ஒரு வடிவம்' என்று தனது கருத்தைத் தெளிவாக முன் வைக்கிறார் நூலாசிரியர். நீதித்துறையில் பெண்கள் அதிக அளவில் இருப்பது அவசியம் என்ற கருத்தையும் வலியுறுத்துகிறார்.

சமகாலத்தின் மிக முக்கியமான பிரச்னைகளைப் பற்றிய மிகத் தெளிவான, மிகச் சரியான புரிதலை ஏற்படுத்தும் சிறந்த நூல்.

நன்றி: தினமணி, 20/8/2018.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027136.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.