என்னை அடைத்(ந்)த அதிர்ஷ்டம்

என்னை அடைத்(ந்)த அதிர்ஷ்டம்,  எழுத்திலிருந்து எழுத்தாளரானது – ஆங்கிலத்தில்: ஆங்கிலத்தில் விஜய் சந்தானம், தமிழில் வாஷிங்டன் ஸ்ரீதர், கலைமகள் பப்ளிகேஷன்ஸ், பக்.144, விலை ரூ.120.

நூலாசிரியர் தமிழின் புகழ்பெற்ற எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் கா.ஸ்ரீ.ஸ்ரீ – இன் பேரன். 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி, நூலாசிரியருக்கு மூளைவாதத் தாக்குதல் ஏற்பட்டது. அதனால் மூளையின் இடது பக்கம் பாதிக்கப்பட்டு, வலது கை, கால் செயலற்றுப் போய்விடுகிறது. பேச முடியவில்லை. எண், எழுத்து எதுவும் நினைவிலில்லை. பிறந்த குழந்தையைப் போல புதிதாக எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டிய நிலை. பிறர் உதவியின்றி எந்தச் செயலையும் செய்ய முடியாத நிலை.

இப்படிப்பட்ட படுமோசமான நிலையில் இருந்து நூலாசிரியர் எப்படி மீண்டு வந்தார்? அப்படி மீண்டு வருவதற்கு அவருடைய மன உறுதி எந்த அளவுக்குக் காரணமாக இருந்தது? புதிதாக பள்ளிக்குச் செல்லும் மாணவனைப் போல எழுத்தைக் கற்றுக் கொள்ளும் நிலையில் இருந்து, படிப்படியாக எழுத்துகள், சொற்கள் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு இந்த நூலை எழுதும் எழுத்தாளராக மாறியது எப்படி? என்பதை இந்நூல் விவரிக்கிறது.

நூலாசிரியருக்கு நேர்ந்த உடல் நலப் பாதிப்பு, அதனால் அவருக்கு மனதில் ஏற்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்புகள், மனைவி, நண்பர்கள், மருத்துவர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்களின் உதவியுடன் ஒவ்வொரு பயிற்சியாகச் செய்து தன்னை மீட்டெடுத்துக் கொண்டதை படிப்படியாக விவரிக்கிறார் நூலாசிரியர்.

தனக்கு இப்படி நேர்ந்துவிட்டதே என்று கவலைப்படாமல், இப்படி நேர்ந்தபின் என்ன செய்வது என்பதை மட்டுமே யோசித்துச் செயல்பட்டிருக்கிறார்.

என் வாழ்வில் மற்ற எல்லாவற்றையும் விட பெரிய விஷயம் நான் உயிர் பிழைத்ததே. இது அதிர்ஷ்டம் இல்லையென்றால் வேறு என்ன? என்னைப் பொருத்தவரை அதிர்ஷ்டம் ஒரு மனநிலை.

வாழ்வில் நமக்கு அளிக்கப்படும் வாய்ப்புகளை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம்'' என்று கூறும் நூலாசிரியரின் அனுபவங்களைப் படிக்கும் ஒவ்வொருவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையொளி வீசும் என்பதில் ஐயமில்லை.

நன்றி: தினமணி, 30/7/2018.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027011.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.