திருப்பா இலக்கியம்
திருப்பா இலக்கியம், ச. வனிதா, சபாபதி வெளியீடு, பக்.164, விலை ரூ. 120.
தமிழும் சமயமும் பிரித்துப்பார்க்க முடியாதவை. சமயச் சான்றோர் பலரின் காலத்தை வென்ற படைப்புகள் தமிழ் இலக்கியத்துக்கு செழுமையும், பெருமையும் சேர்ப்பவையாக உள்ளன. அருணகிரிநாதர் படைத்த திருப்புகழ், வள்ளலார் படைத்த திருவருட்பா போன்ற நூல்களின் வரிசையில் வைத்து அழகுபார்க்கவும், வாய்மணக்கப் பாடிப்பார்க்கவும் தக்கது திருப்பா. அதைப் படைத்தவர் "பாம்பன் சுவாமிகள்' என அழைக்கப்படும் குமரகுருதாச சுவாமிகள்.
எத்தனையோ அற்புத நூல்களைப் படைத்திருந்தாலும் பாம்பன் சுவாமிகளின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கது திருப்பாதான். இவரது அனைத்து நூல்களும் ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதில், ஐந்தாவது மண்டலத்தில் திருப்பா மட்டுமே அடங்கியுள்ளது. இதிலிருந்தே திருப்பாவின் பெருமையைப் புரிந்துகொள்ளலாம்.
இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன. திருப்பா இலக்கியம், திருப்பாவில் சைவசித்தாந்தம், திருப்பாவில் சைவசமயப் புலப்பாட்டுத் திறன், திருப்பாவில் குமரகுருதாசரின் கொள்கைகள் உள்ளிட்ட ஐந்து தலைப்புகளில் ஆழமான, எளிய நடையுடன்கூடிய கட்டுரைகளைப் படைத்துள்ளார் நூலாசிரியர்.
பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறும் முதல் இணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. பாம்பன் சுவாமி பக்தர்களுக்கு மட்டுமன்றி தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கும் பயன்படும் நூல்.
நன்றி: தினமணி, 30/7/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818