எண்பதுகளின் தமிழ் சினிமா
எண்பதுகளின் தமிழ் சினிமா; ஸ்டாலின் ராஜாங்கம், நீலம் வெளியீடு, விலை: ரூ.150.
எண்பதுகளில் வெளியான தமிழ் சினிமாக்களைச் சமூக, அரசியல் கண்ணோட்டத்தோடு அணுகியிருக்கும் ஸ்டாலின் ராஜாங்கத்தின் ‘எண்பதுகளின் தமிழ் சினிமா: திரைப்படங்களின் ஊடான தமிழ்ச் சமூக வரலாறு’ என்ற புத்தகம் ஒரு முக்கியமான வரவு.
எண்பதுகளில் வெளியான சினிமாக்கள் என்னென்ன விஷயங்களைக் கையாண்டன, சமூகங்களை – குறிப்பாக, சாதிய உரையாடல்களை – சினிமாக்கள் எப்படிப் பிரதிபலித்தன, சினிமாக்களைச் சமூகங்கள் எப்படி உள்வாங்கிக்கொண்டன என்று சமூகத்துடன் திரைப் பிரதிகள் நிகழ்த்திய ஊடாட்டங்களை விரிவான ஆய்வுக்கு உட்படுத்துகிறது இந்தப் புத்தகம். ஸ்டாலின் ராஜாங்கம் இந்தப் புத்தகத்தில் கையாண்டிருப்பது கோட்பாட்டுரீதியான அணுகுமுறை அல்ல.
நாம் ஏற்கெனவே பார்த்து ரசித்த சினிமாக்களை ஒரு குறிப்பிட்ட கோணத்திலிருந்து அணுகுவதன் வழியாக சமூகத்தின், சினிமாவின் கூட்டுப் பிரக்ஞையை மேல்மட்டத்துக்கு எடுத்துவருகிறார். புதிய மாற்றங்களுக்குள் வர விரும்பாத, பிற்போக்கான நடைமுறைகளில் சுகம் கண்ட மனத்தின் கூட்டுப் பிரக்ஞையானது சமூகத்துக்குள்ளும் திரைக்குள்ளும் செயல்படும் விதம் மிக நுட்பமாக எடுத்து வைக்கப்படுகிறது.
பார்வையாளர்கள் மீது கருத்துகளைத் திணிப்பதற்காகப் படைப்பாளரும் திரைப் பிரதியும் செலுத்தும் ஆதிக்கங்களை விவாதிக்கும் விஷயங்களெல்லாம் வெகுவாகப் பொது உரையாடலுக்குள் வர வேண்டியவை. ஒருவழிப்பாதையில் சமூகத்தோடு தீவிரமாக உரையாடும் சினிமாவுக்கு இருக்க வேண்டிய தார்மீக அக்கறையை அலட்டல் இல்லாமல் முன்வைக்கிறது இந்தப் புத்தகம்.
நன்றி. தமிழ் இந்து. 11.07.2020.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818