இதய ஒலி என் வாழ்க்கை அனுபவங்கள்

இதய ஒலி என் வாழ்க்கை அனுபவங்கள், பழனி. ஜி. பெரியசாமி, வானதி பதிப்பகம், பக். 352, விலை 350ரூ.

கல்லும் முள்ளும் நிறைந்த கடினப்பாதையில் தொடங்கி, நிறைந்த முன்னேற்றத்தை அடைந்த தொழிலதிபர் பழனி.ஜி.பெரியசாமி, தன் அனுபவங்களை இந்த நூலில் பகிர்ந்து கொள்கிறார். சிலம்பொலி செல்லப்பனாரின் மாணவரான பெரியசாமி, அமெரிக்காவுக்கு மேற்படிப்பிற்காக சென்ற முதல் தலைமுறை இந்தியர் ஆக செல்லும் முன், அங்கு செல்ல தன் மாமனார் தயங்கியதை சுட்டிக்காட்டியிருப்பது, அருமை. ஆனாலும் தன் மனைவி அதை மீறி அனுப்ப முன்வந்தது, தமிழக குடும்பங்களில் உள்ள, ‘நியாய உணர்வை’ வெளிப்படுத்தும் தகவலாகும்.

அமெரிக்காவில் படிக்க முயற்சித்து பேராசிரியராக மிளிர அவர் பட்ட சிரமங்கள் ஏராளம். அதை அடுத்து, தன் மனைவியையும், மகளையும் அழைத்து வந்த போது, வாழ்க்கை நடத்த சிரமப்பட்டதையும் எழுதியிருப்பது, முன்னேற விரும்பும் இளைஞர்கள் பார்வைக்கு உகந்த தகவல். அதே போல எம்.ஜி.ஆர்., உடன் தனக்கு கிடைத்த நட்பு, இந்தியர்களுக்கு உதவ ஏற்படுத்த உருவாக்கிய, ‘தமிழ்நாடு பவுண்டேஷன் ஆப் யு.எஸ்.ஏ.,’ அமைப்பிற்கு, சென்னை கீழ்ப்பாக்கத்தில், தன் சொந்த பணத்தில் இருந்து எம்.ஜி.ஆர்., நான்கு கிரவுண்ட் நிலம் வாங்கித் தந்ததையும் ஆசிரியர் ஆதாரத்துடன் பதிவு செய்தது சிறப்பாகும்.

பொதுமக்களை பாதிக்கும் தொற்று நோய்களை தடுக்க, அமெரிக்க பயணத்தில், எம்.ஜி.ஆர்., அந்த நாட்டில் மேற்கொள்ளப்படும் நடைமுறைகளை உன்னிப்பாக கேட்டறிந்து, அதை தமிழகத்தில் பின்பற்ற வழிமுறைகளை ஆய்ந்த தகவலும் இப்புத்தகத்தில் உள்ளது. தமிழ் சிறக்க ஆற்றிய பல்வேறு
செயல்களை அறிஞர் என்ற முறையில் நிறைவேற்றியதை சொல்லும் விதம், வரலாறு படைக்கும் சுபாவம் கொண்டவர் பெரியசாமி என்பதை பல தகவல்கள் பறைசாற்றுகின்றன.

எம்.ஜி.ஆர்., மறைவுக்குப்பின், தமிழகத்தில் தொடங்கப்பட்ட தொழில்கள், நசிந்து பண இழப்பு ஏற்பட்ட நிலையில் நண்பர்களாக பழகியவர்கள் பாராமுகமாக தன்னிடம் இருந்தனர் என்பதைப் பதிவு செய்திருப்பது வெளிப்படையானதாகும். அதே சமயம் அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம், தனக்கு ஆசிரியர் போல வழிகாட்டியதையும், ஆசிரியர் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். பணம் தரும் சக்தி அபரிமிதமானது என்று கூறும் ஆசிரியர், அனைவரும் விரும்பும் நபராக இருப்பது கடினம் என்று கூறி அதற்கான காரணங்களை விளக்கியிருக்கிறார்.
ஆனால், தன் இதய ஒலியாக, எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகியதையும், அவர் அவ்வப்போது பகிர்ந்து கொண்ட கருத்துக்களும் இருப்பதாக ஆசிரியர் கூறியதை, வாசகர்கள், இந்த நூலை படிக்கும் போது நிச்சயம் உணர்வர். எம்.ஜி.ஆர்., சுபாவம், அவர் பார்வை ஆகியவற்றை உணரவும் இந்த நூல் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை!

-பாண்டியன்

நன்றி: தினமலர், 21/8/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *