இன்பம் நல்கும் இசைத்தமிழ்
இன்பம் நல்கும் இசைத்தமிழ், தொகுப்பாசிரியர்: மு.கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், பக்.368, விலை ரூ.500.
கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பான இந்நூலில் இசைத் தமிழ் குறித்த 56 கட்டுரைகள் உள்ளன. அவற்றுள் நான்கு ஆங்கிலக் கட்டுரைகள். வேதநாயகம் பிள்ளை, பாபநாசம் சிவன், அண்ணாமலை ரெட்டியார், வேதநாயக சாஸ்திரியார் முதலானோர் வளர்த்த இசைத்தமிழ் பற்றியும், அவர்களது இசைத்திறன் குறித்த தகவல்களையும் சில ஆய்வுக் கட்டுரைகள் எடுத்துரைக்கின்றன.
தமிழிசைக்கலை, இசைப் பெயரமைவு, இசைக் கருவிகளின் பெயரமைவு போன்றவற்றை ஒரு கட்டுரை சிறப்பாக விளக்குகிறது. மூன்றாம் நந்திவர்மன் காலத்திய இசைக்கலை குறித்த கட்டுரை சிறந்ததோர் ஆய்வு எனலாம். பண்டைய தமிழரின் இசைக்கலையை விளக்க தொல்காப்பியர் கூறும் இசைக்கலை நுட்பங்களுடன், சங்க இலக்கியங்களில் உள்ள இசைக் குறிப்புகளை பிறிதோர் கட்டுரை ஆராய்ந்துள்ளது.
தமிழிசை இயக்கத் தோற்றம், பிற்காலத்திய தமிழிசை, தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருக்குறள், பெருங்கதை, பன்னிரு திருமுறைகள், ஆழ்வார் பாசுரங்கள் முதலானவற்றில் தமிழிசை வளர்ந்த விதம்; தமிழசை மரபு மாற்றத்துக்கான காரணங்கள், ஆடலில் நிருத்த வகைக்குரிய இசைக்கருவிகள்; நாட்டுப்புறச் சாயல்களைக் கொண்ட மகாகவி பாரதியாரின் கவிதைகள்; கவியரசு கண்ணதாசனின் தாலாட்டுப் பாடல்களில் உள்ள தத்துவங்கள் முதலானவற்றை சில கட்டுரைகள் எடுத்துரைக்கின்றன.
தோல்கருவிகளின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் எடுத்துரைக்கும் மிருதங்க மாணவரான சிறுவன் தருண் எழுதிய கட்டுரை குறிப்பிடத்தக்கது. கட்டுரைகளுக்கான அடிக் குறிப்புகளைத் தந்திருந்தால் நூல் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும்.
நன்றி: தினமணி, 9/12/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818