இயற்கை விவசாயமும் பெண்களின் பங்கும்
இயற்கை விவசாயமும் பெண்களின் பங்கும், காந்தலட்சுமி சந்திர மௌலி, செங்கைப் பதிப்பகம், பக். 248, விலை 150ரூ.
இந்நூலாசிரியர், உலக சுகாதார மையத்தில் பெரிய பொறுப்பிலிருந்த தன் தந்தையுடன் பல நாடுகளைச் சிறு வயதிலேயே சுற்றி வந்தவர். விவசாயம் குறித்த ஆர்வத்தால், அது குறித்த பல்வேறு தகவல்களைத் திரட்டியவர்.
விவசாய நாடாகிய நம் நாட்டில், வர வர விவசாயத் தொழில் சுருங்கி, மற்ற தொழில்கள் பெருகி வருகின்றன. இருக்கும் விவசாயமும்கூட இயற்கை விவசாயமாக இல்லாமல், ரசாயனப் பொருள்களைக் கொண்டு செயற்கை விவசாயமே நடைபெறுகிறது. இதனால் நிலமும், உணவுப் பொருள்களை உட்கொள்ளும் மனிதனும் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகின்றன என்பது குறித்து இந்நூலில் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.
தவிர, இப்பிரச்னைகளை எதிர்கொண்டு, இயற்கை விவசாயத் தொழிலில் வெற்றி கண்ட பலரது அனுபவங்களையும், யுக்திகளையும் 42 கட்டுரைகளில் விவரித்துள்ளார். குறிப்பாக இத்தொழிலில் பெண்கள் கண்ட முன்னேற்றத்தை பூங்கோதை, மாலினி சதீஷ், வந்தனா சிவா.. என்று பல பெண்களைக் கொண்டு விளக்குகிறார்.
அதேபோல் டி.டி.டீ. எனும் பூச்சிக் கொல்லி மருந்தால் மனிதனுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் ஏற்படும் தீங்குகளையும், ரசாயன உரங்களால் ஏற்படும் தீங்குகளையும் விளக்கியுள்ளார். கரிம பொருட்களான வேப்பிலை, மாட்டு சாணம் போன்ற பொருட்களைக் கொண்டு விவசாயம் செய்வதையும், அதனால் ஏற்படும் நன்மைகளையும் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், டாக்டர் சோலையப்பன், ஜே.சி. குமரப்பா, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மிஸாநோபு ஃபுகோகா போன்றோரின் கருத்துக்களையும் எளிய தமிழ்நடையில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 3/5/2017.