ஜப்பான் பயணக் கட்டுரைகள்
ஜப்பான் பயணக் கட்டுரைகள், ஐந்திணைப் பதிப்பகம், விலை: ரூ.60ஐந்திணைப் பதிப்பகம், விலை: ரூ.60
தி.ஜானகிராமனின் இரு பயணக் கட்டுரைகள் இன்றும்கூட வாசிக்கப்பட வேண்டியவை. ஒன்று, ‘உதயசூரியன்’ (ஜப்பான் பயணக் கட்டுரைகள் – சுதேசமித்திரன் – 1967), மற்றொன்று ‘கருங்கடலும் கலைக்கடலும்’ (செக்கோஸ்லோவோகியா பயண அனுபவங்கள் – கணையாழி – 1974). வெறுமனே பயணக் கட்டுரையாக அல்லாமல், அங்கே சென்றபோது தனக்குத் தோன்றிய சிந்தனைகளை எல்லாம் அவ்வளவு அழகாக வடித்திருப்பார் தி.ஜா.
கியாத்தோ ரயில் நிலையத்தில் கூலிகளையோ போர்ட்டர்களையோ காண முடியவில்லை என்று சொல்கிற இடத்தில், “கல்வி பரந்து, தரமும் உயர்ந்து, கல்வி வசதிகளும் பெருகும்போது தேர்ச்சிபெற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை பெருகி, மூட்டை தூக்கியேதான் காலந்தள்ள வேண்டும் என்ற கபோதி நிலை அகன்றுவிடுகிறது. ஒரு காலத்தில் எட்டாப்பழமாக இருந்த ரேடியோ, டெலிவிஷன், கார் போன்ற ஆடம்பரங்கள், பெரும்பாலானோருக்கும் கிடைக்கக்கூடிய அன்றாட அவசியமாகவும் சௌகரியமாகவும் மாறும்போது மனித உணர்வு நோக்குகளிலேயே மாறுதல்கள் உண்டாகின்றன. பிறர் மூட்டையைத் தூக்கியே பிழைக்க வேண்டும் என்ற அவசியம் தளர்வதுபோல, நம் மூட்டையை நாமே தூக்கிக்கொள்வது அகௌரவம் என்ற வீம்பும் தளரத்தான் செய்கிறது. பொருளாதாரத்தில் முற்போக்குப் பாதையில் நடைபோடும் நாடுகளில் எல்லாம் காண்கிற மாறுதல்தான் இது” என்கிறார் தி.ஜா.
ஜப்பான் சென்ற ஒரு வாரத்தில் தன்னுடைய குரல் தாமாகத் தழைந்துவிட்டதைச் சொல்லும் தி.ஜா, “அமைதி, நிதானம், எளிமை, அழகு. ஜப்பானிய வாழ்க்கையின் ஆதார சுருதி இது. இவற்றை எல்லாம் ஒரு வாழ்க்கை முறையாகச் சாதகம் செய்துவருகிறார்கள் அவர்கள். பெரிய தொழிற்சாலைகள், சாலைகளில் விரையும் வாகனங்கள், ட்ராம் இத்தனையும் மௌனமாக இயங்குவதுபோலவே நமக்கு ஒரு உணர்வு உண்டாகிறது” என்கிறார்.
ஒரு கிரீன் டீ குடித்த அனுபவத்தை ஒரு தவம்போல அனுபவித்து 8 பக்கங்களுக்கு எழுதியிருக்கிறார் தி.ஜா. தேநீர் பிரியர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய பகுதி அது. சமையல், ஓவியம், இசை, நாட்டியம் போன்றவற்றிலும் ஆர்வம் கொண்ட தி.ஜா., அந்நாட்டுக் கலைகளையும் (‘இக்கிபானா’ மலர்க்கோலம், ‘சுமோ’ சண்டை, ‘நோ’ நாடகம்), பழமை மாறாத வீடுகளின் அமைப்பு, உள் அலங்காரம், உணவு மேஜை போன்றவற்றையும் வர்ணிக்கிற பாங்கு புனைவு இலக்கியத்தில் ஈடுபாடு இல்லாதவர்களுக்கான கொடை.
– கே.கே.மகேஷ்.
நன்றி: தமிழ் இந்து.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818