ஜெயகாந்தனும் நானும்
ஜெயகாந்தனும் நானும், தேவபாரதி, கலைஞன் பதிப்பகம்.
ஜெயகாந்தனின் காலம் பொற்காலம்!
தேவாரதி எழுதிய ‘ஜெயகாந்தனும் நானும்’ என்ற நூலை சமீபத்தில் படித்தேன். கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
ஜெயகாந்தன் என்ற ஆளுமை, தமிழ் எழுத்துலகில் மிக முக்கியமானவர். அவர், மற்றவர்களை போல அல்லாமல், அரசியல்வாதியாக, இயக்குனராக, பேச்சாளராக, எழுத்தாளராக புகழ் பெற்றவர். தேவபாரதி, ஜெயகாந்தனுடன் பழகியபோது நிகழ்ந்த மறக்க முடியாத நிகழ்வுகளை, நாவல்போல, சுவைபட இந்த நூலில் கூறுகிறார்.
கண்ணதாசனின் ‘வனவாசம்’ மிகவும் வெளிப்படையாக இருக்கும். அது, ரகசியமான அழகியலோடு பேசுகிறது. ஒருமுறை தேவபாரதி, ஜெயகாந்தனின் கையெழுத்தை இட்டு, வங்கிக்கணக்கில் இருந்து பணம் பெற்றதைக் கூற, அவர் தேவபாரதியை கடிந்து கொள்ளவில்லை. ராமசாமி என்பவரின் கடைக்கு சென்று, மற்றவர்களின் பெயர்களை கூறி சிகரெட் பெறுவது, எம்.எஸ். கண்ணன், வீட்டில் இருந்து பேருந்தில் வந்து, அலுவலகத்திற்கு சற்று முன் கார் எடுத்து வந்து, வாடகை வசூலித்தது போன்ற நிகழ்வுகளை இருவரும் கூறி சிரிப்பார்களாம்.
ஜெயகாந்தனின் இளமைக் கால புகைப்படம், சரஸ்வதி பத்திரிகையில் வெளியானதை பார்த்துவிட்டு, ஒரு முட்டைக் கடைக்காரர் ‘இ ஆளு வல்லிய ஆளாயிட்டு வரும்’ என்றும் அவரின் முகத்தில் ஒளி வட்டம் வீசுவதாகவும் கூறினாராம்.
ஒருமுறை பாலதண்டாயுதம் டில்லிக்கு புறப்பட, சென்னையில் வானத்தில் பறந்த விமானத்தை காட்டி, ‘இதில்தான் பாலன் போகிறார்’ என ஜெயகாந்தன் சொல்ல, ‘மோகன் குமாரமங்கலமும் போகிறார்’ என தேவபாரதி கூறியதையும், அந்த விமானம் விபத்துக்குள்ளானதை அறிந்து வருந்தியதையும் தெரிவித்துள்ளார்.
ஒருமுறை வாசவன் தன் பத்திரிகைக்கு ஜெயகாந்தனிடம் கதை கேட்க, ‘சன்மானம் தருவீர்களா?’ என ஜெயகாந்தன் கேட்டாராம். வாசவன், ‘என் பத்திரிகை சிறியது’ என்றாராம். அதற்கு, ‘நான், பெரிய எழுத்தாளர். இல்லையா?’ என்றாராம்
ஜெயகாந்தன். இவ்வாறாக, சந்திரபாபு, எல்.ஏ. பாலன், இதயவன் உள்ளிட்டோருடனான நம்பிக்கை பற்றியும் சுவைபட விவரிக்கிறார். ஜெயகாந்தனின் காலம் பொற்காலம். அதை அறிய இந்நூல் உதவுகிறது.
-திருப்பூர் கிருஷ்ணன்.
எழுத்தாளர்.
நன்றி: தினமலர், 10/7/2016.