கே.பாலசந்தர் வேலை டிராமா சினிமா

கே.பாலசந்தர் – வேலை, டிராமா, சினிமா – 37 வயது வரையிலான வாழ்க்கை வரலாறு ,சோம.வள்ளியப்பன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.152, விலை ரூ. 115.

நாடகத்துறையிலிருந்து திரைத்துறையில் நுழைந்து நூறு படங்களை இயக்கி சாதனை புரிந்து, திரைத்துறைக்கென இந்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதான “தாதா சாஹேப் பால்கே’ விருதினைப் பெற்று தமிழ்ப்பட உலகில் தனித்த மரியாதைக்குரிய இயக்குநராகத் திகழ்ந்தவர் மறைந்த கே.பாலசந்தர்.

அவரது பிறப்பு, குடும்பச் சூழல், பள்ளிப் பருவம், கல்லூரிப் படிப்பு, பக்கத்து கிராமத்தில் ஆசிரியர் பணி, சென்னையில் ஒரு பெரிய அலுவலகத்தில் கிளார்க் வேலை, நாடகத்துறையில் ஈடுபாடு, நாடக ஆசிரியராகப் புகழ் அடைதல், திரைப்படத் துறையில் நுழைவு என்பது வரை (அவரது 37 வயது வரையிலான) முக்கிய அனுபவங்களின் தொகுப்பே இந்நூல்.

பள்ளிப் பருவத்திலேயே நாடகத்துறை மீது பாலசந்தருக்கு இருந்த ஈடுபாடு, கல்லூரியில் படித்தபோது இந்தியா விடுதலையடைந்தது, அந்நாளை துக்க நாள் என்று பெரியார் அறிவிக்க கல்லூரியில் இரு பிரிவு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல், இவர் நாடகங்களை மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஒளவை சண்முகம், மெய்யப்ப செட்டியார் முதலிய பிரபலங்கள் பாராட்டியது, எம்.ஜி.ஆர். நடிக்கும் படத்திற்கு வசனம் எழுத ஒத்துக்கொண்டு தவித்தது, இவரது ஒரு நாடகத்தில் அன்று பிரபல சினிமா நடிகராக இருந்த நாகேஷ் ஒரே ஒரு காட்சியில் விரும்பி நடித்தது – இப்படி ஏராளமான சுவையான தகவல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஆயினும் ஓரிரு குறைகளைச் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை. குறிப்பாக, அவரது பிறந்த ஆண்டு 1930 என்று இருக்கிறதே தவிர மாதம், தேதி எதுவும் இல்லை. சில அச்சுப்பிழைகள் தகவல் பிழைகளாக மாறிவிட்டிருக்கின்றன. முத்துப்பேட்டை சில இடங்களில் அம்மாப்பேட்டை ஆகியிருக்கிறது. செம்மங்குடி சீனிவாச ஐயர் செம்பை சீனிவாச ஐயர் ஆகியிருக்கிறார்.

கே.பாலசந்தர் குறித்து பல நூல்கள் வந்திருக்கலாம். ஆனால், இந்நூலில்தான் அவரது இளமைக்காலம் முழுமையாகப் பதிவாகியிருக்கிறது. காரணம், இந்நூலிலுள்ள செய்திகளெல்லாம் பாலசந்தரே கூறியவை. அதுவே இந்நூலின் சிறப்பு.

நன்றி: தினமணி, 25/7/2016

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *