கடல் மரங்கள்
கடல் மரங்கள், மலையாளத்தில் வெள்ளியோடன், தமிழில்: ஆர்.முத்துமணி, முதற்சங்கு பதிப்பகம், பக்.88, விலை ரூ.70.
ஈழவிடுதலைப் போராட்டத்தில் சிங்களர்களையும், மலாய்க்காரர்களையும் நம்பியிருக்கலாமே? எல்லாரையும் இணைத்துக் கொண்டு போராடியிருக்கலாமே?
வியட்நாம் எல்லைப்புறப் பகுதியில் உள்ள கு ஆங் ஷி பகுதியைச் சீனா வலுக்கட்டாயமாகத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. தற்போது சிக்கிமையும், அருணாசல் பிரதேசத்தையும் இணைக்க வேண்டும் என்று கேட்பதைப் போல.
இஸ்ரேலியர்கள் இஸ்லாமியர்களைக் கொன்று குவிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இஸ்லாமியர்களை அதிக அளவில் கொன்று குவித்தவர்கள் இஸ்லாமியர்கள்தான்.
இன்னும் இவற்றைப் போல நிறைய அரசியல் விஷயங்கள் இந்நூலில் சொல்லப்படுகின்றன. நவீன காலத்தில் பெண்கள் இன்னும் போகப் பொருளாக இருக்கிறார்கள். வெறும் உடலாகக் காட்சி தருகிறார்கள் என்று இந்நூல் சுட்டிக்காட்டுகிறது. இவற்றை எல்லாம் படித்தவுடன் இந்நூல் தீவிரமான அரசியல் விஷயங்களைப் பேசும் ஒரு கட்டுரை நூல் என்று எண்ணிவிட வேண்டாம்.
பத்து சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். இவற்றை எழுதிய நூலாசிரியரின் அரசியல், வாழ்க்கைப் பார்வைகள் இச்சிறுகதைகளின் மூலம் வெளிப்பட்டிருக்கின்றன. எனினும் சிறுகதைகளுக்குரிய கலைத்தன்மையில் எவ்விதத்திலும் குறைவு இல்லை என்பது வியப்பைத் தருகிறது.
நூலாசிரியரின் பார்வை எந்த அளவுக்குச் சரியானது என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அவருடன் உடன்பாடு இல்லாதவர்களும் கூட ரசித்து வாசிக்கும்படியாக சிறுகதைகள் அமைந்துள்ளன. சாதாரண மனிதர்களின் மன உணர்வுகள், விருப்பங்கள், வேதனைகள், விரக்திகளைச் சொல்லும் சிறுகதைகளும் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. அளவில் சிறியதாயினும் இந்நூல் ஏற்படுத்தும் தாக்கம் மிக அதிகம்.
நன்றி: தினமணி, 12/6/2017.