கலாம் கனவு நாயகன்

கலாம் கனவு நாயகன், ரமேஷ் வைத்யா, விகடன் பிரசுரம், பக். 159, விலை 185ரூ.

அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு முதன்முறையாக, அவரே சொல்வதாக, ரமேஷ் வைத்யா எழுத்தில், காமிக்ஸாக 60 பக்கங்களில் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் ஆற்றிய உரைகளின் பகுதிகள், அவர் அளித்த பேட்டிகள், சுட்டிக் குழந்தைகளின், பொதுமக்களின் கேள்விகளுக்குச் சொன்ன பதில்கள், அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின்போது வந்திருந்தவர்களிடையே அவர் ஏற்படுத்திய உத்வேகமான உணர்வுகள், நம் நாட்டின் மீது அவர் கொண்டிருந்த பெருமிதமான கருத்துகள் என்று பல பரிமாணங்களிலும் படைப்புகளை இந்த நூலில் படிக்கலாம்.

‘இந்தியன் என்பதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?’ என்ற கேள்விக்கு கலாம் சொல்லும் பதிலைப் பாருங்கள்: ‘64 வருட ஜனநாயகப் பயணத்தில் எவ்வளவோ நல்லது நடந்திருக்கிறது. எவ்வளவோ தீமைகள் நடந்திருக்கின்றன. எவ்வளவோ சாதனைகளையும் வேதனைகளையும் தாண்டி நாம் நடைபோட்டுக் கொண்டு இருக்கிறோம். இவற்றுக்கு நடுவில், ஆகாயத்தில் மின்னும் நட்சத்திரம் போல் ஒன்று மின்னிக்கொண்டு இருக்கிறது. அந்த நம்பிக்கை நட்சத்திரம்தான் ஜனநாயகம்… ஜனநாயகம்… ஜனநாயகம்!’ஐதராபாத் நகரில் ஆற்றிய ஓர் உரையில், ‘சிங்கப்பூரில் நீங்கள் இருந்தால் சிகரெட் துண்டைத் தெருவில் எறிய மாட்டீர்கள். துபாயில் இருக்கும்போது ரமலான் மாதத்தில் பொது இடத்தில் உண்ண உங்களுக்கு தைரியம் வராது. லண்டனில் ஓர் ஊழியருக்கு லஞ்சம் கொடுத்து, ‘என் தொலைபேசிக் கட்டணத்தை வேறு யார் பில்லிலாவது மாற்றிவிடு’ என்று சொல்ல மாட்டீர்கள்.

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து கடற்கரைகளில் குப்பைத் தொட்டி தவிர வேறு எங்கும் குப்பையை எறிய மாட்டீர்கள். பாஸ்டன் பல்கலைக் கழகத்தில் போலிச் சான்றிதழ் வாங்க முயல மாட்டீர்கள். இப்படியெல்லாம் வெளிநாடுகளில் ஒழுங்குகளை மதிக்கத் தெரிந்த உங்களால் உங்கள் சொந்த நாட்டின் ஒழுங்குகளை மதிக்க முடியவில்லையே, ஏன்?’ என்று முழங்குகிறார். மனசாட்சியை உசுப்பும் முழக்கம்.

-சந்திரசேகர்.

நன்றி:தினமலர், 24/7/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *