கலைஞர்: இலக்கியத்தடம்
கலைஞர்: இலக்கியத்தடம், சு.சண்முக சுந்தரம், காவ்யா, பக். 352, விலை ரூ.350.
கலைஞர் மு.கருணாநிதியை இன்றைய தலைமுறைக்கும் வருங்கால தலைமுறையினருக்கும் அறிமுகம் செய்து வைக்கும் நோக்கில் இந்நூலை எழுதியிருக்கிறேன் – என்று கூறும் நூலாசிரியர் கலைஞரின் பன்முக ஆளுமைகளை இந்நூலில் பட்டியலிட்டிருக்கிறார்.
கருணாநிதியின் தமிழ்ப்பணி குறித்து கூறும்போது, நாடகங்களான “தூக்குமேடை’ தொடங்கி “மணிமகுடம்’ வரையிலும், சிறுகதை என்றால் “குப்பைத்தொட்டி’ தொடங்கி திடுக்கிட வைக்கும் சிறுகதைகள் வரையிலும், நாவல் என்றால் “புதையல்’ தொடங்கி “பொன்னர் சங்கர்’ வரையிலும் எந்தெந்த காலத்தில் – எந்தெந்த பத்திரிகைகளில் அவை வெளிவந்தன என்று கூறுவதுடன், அவற்றின் கதைச் சுருக்கங்களையும் அளித்திருக்கிறார். கவிதைகள் – மேடைத் தமிழ் என்றால் அவரின் கவிதை நறுக்குகள், பேச்சுக்கள் என தொகுத்தளித்திருக்கிறார் ஆசிரியர்.
“பத்திரிகைத் தமிழ்’ தலைப்பில் “முரசொலி’ உருவான விதமும், பின்னர், நாளிதழாக அது உருப்பெற்றது குறித்தும் எழுதியிருப்பதுடன் “முத்தாரம்’ என்கிற இலக்கிய இதழ் உருவானதைப் பற்றியும் அதன் சாதனைகள் குறித்தும் விவரித்திருக்கிறார்.
கலைஞரின் திரையுலகப் பங்களிப்பை விளக்க இந்நூலின் பெரும்பகுதி – சுமார் 140 பக்கங்கள் வரை- ஒதுக்கப்பட்டுள்ளன. “ராஜகுமாரி’ தொடங்கி ” பராசக்தி’ வரை 48 படங்களின் கதைச்சுருக்கம் – தயாரித்த ஆண்டுகள், தொழில்நுட்ப கலைஞர்கள், நட்சத்திரங்களின் விவரங்களுடன் அத்திரைப்படங்களின் வசன நேர்த்தி, அவரின் திரைப்பட பாடல்கள், அவை எழுதப்பட்ட காலம், அவை குறித்த விவரம் என்று அனைத்தையும் தேடிப்பிடித்து நூலாக்கியிருக்கிறார் நூலாசிரியர்.
அண்ணா தொடங்கி வைத்த அரசியலா கட்டும்- அவரின் திரைப்பட சாதனைகளாகட்டும் இவை இரண்டுக்கும் சரியான வாரிசாக கலைஞர் திகழ்வதாக நூலில் நிறுவப்பட்டுள்ளது. அரசியலும் கலையும் அவரது வாழ்வில் பிரிக்க முடியாத தாயிற்று என்கிறார் நூலாசிரியர்.
நன்றி: தினமணி, 13/12/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%ae/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818