தெ.பொ.மீ. தமிழ்மொழி வரலாறு
தெ.பொ.மீ. தமிழ்மொழி வரலாறு, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், தொகுப்பாசிரியர்கள்: சு.சண்முகசுந்தரம், பல்லடம் மாணிக்கம், காமாட்சி சண்முகம்; காவ்யா, பக்.396, விலை ரூ.400;
கடந்த நூற்றாண்டில் தமிழுக்குப் பெருந்தொண்டாற்றிய சான்றோருள் குறிப்பிடத்தக்கவர் தெ.பொ.மீ. எனப்படும் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் ஆவார். அவர் இந்நூலில், தமிழ்மொழியின் வரலாற்றைச்சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.
தமிழ்மொழி வரலாற்றுக்கான அடிப்படைச் சான்றுகளைப் பட்டியலிடும் முதல் கட்டுரையில் தொடங்கி, “மூலத் திராவிட மொழி’, “தென் திராவிட மொழிகளும் தமிழும்’, “தொல்காப்பியத் தமிழ்’, “சங்ககாலத் தமிழ்’, “பல்லவர் சோழர் நாயக்கர் காலத் தமிழ்’ உள்ளிட்ட பத்து தலைப்புகளில் தமிழ்மொழியை விரிவாக ஆராய்ந்துள்ளார் நூலாசிரியர்.
குறிப்பாக, “தொல்காப்பியத் தமிழ்’ கட்டுரையில் தொல்காப்பிய நூற்பாக்கள் சிலவற்றுக்கிடையே காணப்படும் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். “சங்ககாலத் தமிழ்’ கட்டுரையில் பலர்பாலுக்கு உரிய “செய்ய’ என்பதன் வழக்காறு மிகவும் குறைந்து வருவதைக் குறிப்பிட்டிருப்பதோடு, “செய்யுமார்’ எனும் வடிவம், “செய்வார்’ எனும் வடிவத்துக்கு இடம் தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பன்மை விகுதியாகிய “கள்’ முதன்முதலில் தொல்காப்பியத்தில் “மக்கள்’ என்ற சொல்லில் இடம்பெற்றிருப்பதைக் குறிப்பிடும் ஆசிரியர், அச்சொல்லிலுள்ள “கள்’ விகுதியை எளிமையாகப் பிரிக்க முடியாது என்பதையும் குறிப்பிடுகிறார்.
“தமிழ்மொழியின் புற வரலாறு’ எனும் கட்டுரையில் தமிழ்மொழியிலிருந்து பிற மொழிகளுக்குச் சென்றுள்ள சொற்களைப் பட்டியலிட்டிருப்பதோடு, திராவிட மொழிக்கு இன்றியமையாதவை என சில சொற்களையும் குறிப்பிட்டிருக்கிறார்.
நூலின் இறுதிப் பகுதியில் கலைச்சொல் பட்டியல் (தமிழ்-ஆங்கிலம்) தரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் ஆய்வாளர்களுக்கும் மிகவும் பயன்தரக்கூடிய சிறந்த நூல்.
நன்றி: தினமணி, 20/12/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818