கல்லோ காவியமோ
கல்லோ காவியமோ, மருத்துவர் வ. இன்பசேகரன், ஏ.வி.எஸ். வடிவேல்-ஜெயலட்சுமி பதிப்பகம், விலை 150ரூ.
ஊர் சுற்றினாலும் உலகம் சுற்றினாலும் இன்றளவும் மக்களிடையே கல்வி, பண்பாட்டு ஊடாட்டங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. வரலாறுகளையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. பயணம் என்பது மகிழ்வுக்காக மட்டுமல்ல, அறிவு மற்றும் புரிதல் பகிர்வுக்குமாகவே, இப்பயண நூல் அதற்கு சான்றாக உள்ளது. இந்நூல், கம்போடியா நாட்டின் இயற்கை மற்றும் பூகோள அமைப்பு, தொன்மை வரலாறு, மன்னர்தம் மாண்பு, நுண்மையான கலையியல் சான்றுகள், அங்கு திகழும் கட்டங்களின் மாட்சி என பல்துறை செய்திகளை தாங்கி அறிவுப் பெட்டகமாக விளங்குகிறது. ஆற்றொழுக்கான எளிய நடை, அழகான படங்கள், இனிமையான சொல்லாட்சிகள், தமிழகக் கோவில்களோடும், பண்பாட்டோடும் ஒப்பிடும்நேர்த்தி, பண்டை வரலாற்றினைப் பழுதின்றி எடுத்துரைக்கும் பாங்கு இவையனைத்தும் நூலாசிரியருக்கு கைவந்த கலைகளாக இருக்கின்றன. தாம் பெற்ற இன்பத்தை சேகரித்து இந்நூல் வழியாக தந்திருக்கிறார் மருத்துவர் இன்பசேகரன்.
நன்றி: தினத்தந்தி, 11/5/2016.
—-
நானும் அந்த 30 பேரும், கவிஞர் தியாரூ, ஜே.பி.ரூபன் பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ.
30 வாசகர்கள் கொடுத்த முதலடியை முதலாகக் கொண்டு கவிஞர் தியாரூ படைத்த கவிதைகளின் தொகுப்பு நூல். இன்பங்கள், துன்பங்கள், சுகங்கள், துக்கங்கள், தரிசனங்கள், தாக்கங்கள், காதல், கோபம், ஏக்கம், கொண்டாட்டம் அனைத்தும் கவிஞரின் கைவிரல்களில் கவிச்சரங்களாய் சுடர்விடுகின்றன. ரசிக்கத்தக்க தொகுப்பு.
நன்றி: தினத்தந்தி, 11/5/2016.