கம்பன் கண்ட இராமன்

கம்பன் கண்ட இராமன், கீரனூர் ராமமூர்த்தி, ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா சொசைட்டி, பக். 271.

சொற்பொழிவுகள் மூலம், கம்பனின் கவிநயத்தையும், ராமனின் புகழையும் பரப்பி வந்த நுாலாசிரியர், கவிதையின் உச்சத்தைத் தொட்ட கம்பனின் கவிதைகளை இடையிடையே இணைத்து, எளிய தமிழில் எல்லாருக்கும் புரியும் வண்ணம் நுாலை உருவாக்கி இருக்கிறார் ஆசிரியர்.

கம்ப ராமாயணக் கடலில் மூழ்கி, கம்ப ராமாயணத்தையே கதையாகவும், கம்பன் கவிதைகளோடும் ‘கம்பன் கண்ட ராமன்’ என்னும் பெயரில் நுாலை வெளியிட்டுள்ளார். கம்ப ராமாயண கதையை தெரிந்து கொள்ள விரும்புவோர், இதைப் படித்தால் போதும் என்று சொல்லும் அளவுக்கு நுால் அமைந்துள்ளது.

தான் இயற்றும் வேள்வியை காப்பாற்ற ராமனைத் தரும்படி விசுவாமித்திர முனிவர் வேண்டியபோது, ‘கண் இலான் பெற்று இழந்தான்’ என தசரதன் அடைந்த நிலையைக் கம்பன் கூறுவதை நுாலாசிரியர் உருக்கமாக கூறியுள்ளது, உள்ளத்தை உருக்குகிறது. ராமனின் பாதுகைகள் பட்டதும் அகலிகை உயிர்த்தெழுந்தாள்.

இந்நிகழ்வை விசுவாமித்திரர் கூறுவதாக, ‘கை வண்ணம் அங்குக் கண்டேன்; கால் வண்ணம் இங்குக் கண்டேன்’ எனக் கம்பன் கூறுவதை நுாலாசிரியர் நயம்பட விளக்கியுள்ளார்.

‘அரியணை அனுமன் தாங்க’ என்னும் ஒரு பாடலில், கம்பன் தன் புலமை முழுமையும் வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறி, அதை விளக்கும் பாங்கு படித்து இன்புறத்தக்கது.
தொட்ட இடமெல்லாம் கவிதை நயம் சொட்ட அமைந்துள்ள இந்நுால், கம்ப ராமாயண சொற்பொழிவாளர்களுக்கும், ராமாயண ரசிகர்களுக்கும், பாராயணம் செய்யும் பக்தர்களுக்கும் பயனுறு நுாலாகத் திகழும்.

– புலவர் சு.மதியழகன்.

நன்றி: தினமலர், 8/7/2018.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *