கம்பனில் ஆழம் கண்ட வேழம் கம்பன் அடிப்பொடி
கம்பனில் ஆழம் கண்ட வேழம் கம்பன் அடிப்பொடி, சொ.சேதுபதி, வானதி பதிப்பகம், பக்.352, விலை ரூ.250.
கம்பன் கழகங்களுக்கெல்லாம் தாய்க் கழகமாக விளங்குவது "கம்பன் அடிப்பொடி சா.கணேசனால் 1939-ஆம் ஆண்டு காரைக்குடியில் தொடங்கப்பட்ட கம்பன் கழகம்தான். இக்கழகத்தின் மூலம் உலகம் முழுவதும் கம்ப காவியத்தைக் கொண்டு சேர்த்த பெருமை சா.கணேசனையே சாரும். இந்நூல், சா.கணேசனை வேழமாக உருவகப்படுத்தி, அவர் கம்ப காவியத்தில் கண்டஆழத்தைக் கூறி, முழுக்க முழுக்க அவர் புகழபாடியிருக்கிறது.
இதுவரை அச்சு வாகனம் ஏறாமல் இருந்த சா.கணேசனின் உரையும் பாட்டும் நூல் முதன்முதலில் இந்நூலில் உலா வருகிறது. கடலும் களிறும் கம்பனில் ஆழம் கண்ட வேழம். கம்பனில் வேழம் கண்ட ஆழம், துணைமைத் தரவுகள் ஆகிய நான்கு பகுதிகளாகப் பகுக்கப்பட்டு, 36 தலைப்புகளில், வேழமுகன் என்ற பெயருக்குக் காரணமான கணேசன் என்னும் பெயரை அடியாகக் கொண்டு, கம்பக் கடலுக்குள் மூழ்கி அவர் கண்டெடுத்துக் கொடுத்த முத்துக்களை மாலையாகக் கட்டித் தந்திருக்கிறார் நூலாசிரியர்.
முதல் பகுதியில், ரசிகமணிக்குக் கம்பன் அடிப்பொடி எழுதிய கடிதம், கம்பனில் ஆழம் கண்ட வேழத்தின் ஆற்றல், வேழம் கண்ட ஆழத்தின் சுவடுகள், கம்பன் அடிப்பொடி கண்டு தந்த கலை வடிவங்கள் ஆகியவை உள்ளன.பட்டிமண்டம், வேழமுகவில்லியர் என்கிற சொற்களுக்கான விளக்கம், தீபத்தில் சுடரும் தியாகி என்கிற தலைப்பில் தீபம் இதழில் வெளியான நேர்காணல்; 1976-இல் கம்பன் திருநாள் மங்கலம் நிகழ்வில் சா.கணேசன் ஆற்றிய இரு வரவேற்புரைகள், 1940-இல் எழுதிய அடியேன் கண்ட கம்பன், மறுப்பொடு கூடிய ஒரு விளக்கம், நான் ஒரு கம்பன் அடிமை போன்றவை சுவையான பதிவுகள்.
கம்பனில் வேழம் கண்ட ஆழம் என்னும் மூன்றாவது பகுதி, வேழத்தின் அளப்பரிய நினைவாற்றலையும், தாய்மைக் குணத்தையும், பணியில் அவர் கொண்ட தூய்மையையும், வாய்மையையும், கம்பன் வழி கற்றதையும் எடுத்துரைக்கிறது.
நன்றி: 3/6/19, தினமணி.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029504.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818