கறையான்

கறையான், சீர்ஷேந்து முகோபாத்யாய, தமிழில்: சு.கிருஷ்ணமூர்த்தி, நேஷனல் புக் டிரஸ்ட், விலை : ரூ.170.

மனிதன் தன்னிடம் திரும்பும் கதை

வேலை, அலுவலகம், உறவு, அந்தஸ்து என்ற சராசரி சமூக வரையறையில் பொருந்திப்போகும் அனைத்துத் தகுதிகளையும் குணங்களையும் கொண்டவன்தான் ‘கறையான்’ நாவலின் நாயகன் சியாம். மேலதிகாரி தன்னைக் கெட்ட வார்த்தையால் திட்டிவிட்டார் என்பதை முன்னிட்டு சௌகரியங்களைத் தந்த வேலையிலிருந்து வெளியேறுகிறான். அன்றிலிருந்து அவனுக்கு அதுவரை தெரிந்த, அறிந்த உலகம் மூடிவிடுகிறது; அவன் வசிக்கும் கொல்கத்தாவுக்குள்ளேயே மாயமும் ஏகாந்தமும் கொண்ட இன்னொரு உலகம் திறக்கிறது. அங்கே அவனுக்கு வர்க்கம், மதம், தேசம், பாலின அடையாளம் எதுவும் இல்லை; மனிதனுக்கும் நாய்க்கும் அங்கே பேதமில்லை; நன்மை, தீமை என்று சமூகம் வரையறுத்திருக்கும் பிரிவினைக் கோடுகளும் இல்லை.

வேலையை விட்ட பிறகு, தான் இதுவரை சேர்த்துவைத்த நற்பெயர், தோழிகளிடமும் நண்பர்களிடமும் உருவாக்கியிருந்த கவர்ச்சி, பொது இட நாகரிகம் என எல்லாவற்றையும் பணயம் வைத்து விளையாடும் விளையாட்டுகளை விளையாடுகிறான். புத்தியைத் தொலைத்தவன்போல, ஒரு கனவின் விளிம்பில் அவனது அன்றாட வாழ்க்கை இன்னொன்றாகத் துலங்கத் தொடங்குகிறது.

சியாமின் தோழி இதூ, அவனை எத்தனையோ உற்சாகப்படுத்தினாலும் உற்சாகம் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில், சியாம் தன்னைத் தொட முடிந்தால் தொடு என்று சவால் விட்டு, அறைக்குள் ஒரு விளையாட்டைத் தொடங்குகிறான். விளையாட்டு தீவிரமாகவும் பைத்தியக்காரத்தனமாகவும் ஏதாவது துயரம் நடந்துவிடுமோ என்ற இடத்துக்கும் போகிறது. இதூவால் அவனைப் பிடிக்க முடியவில்லை. அறையில் ஏற்றப்பட்டிருந்த விளக்கின் தீபம் இதூவின் சேலை முந்தியில் பற்றிவிடுகிறது. கருகிய முந்தியுடன், சியாமைப் பிடிக்க முடியாமலேயே வெளியேறி நிரந்தரமாகப் பிரிந்துபோகிறாள் இதூ.

ஆண்-பெண் உறவுநிலையில் உள்ள கொந்தளிப்பும் அபாயமும் மரண விளிம்பில் கைகோத்து ஆடும் நாடகம் இது.

ஒரு கட்டத்தில், அவனுக்குப் பரிச்சயமான உலகமும் பெண்களும் பரிச்சயமானவர்கள் இல்லை என்று அவனுக்குத் தோன்ற ஆரம்பிக்கிறது. அப்போது அலுவலக வரவேற்பறைப் பெண்ணான லீலா அறிமுகமாகிறாள். லீலா அறிமுகமான பிறகு, மனிதர்கள் படிப்படியாகக் குறைந்து, சூன்யமாகிவரும் ஒரு மாநகரமாக கல்கத்தா அவனுக்குள் உருமாறுகிறது. ஒரு மழை நாளில் இரண்டாம் முறை லீலாவைப் பார்த்தபோது மான்கள் அவனுடன் ஓடிக்கொண்டிருக்கும் சத்தத்தைக் கேட்கிறான்.

லீலா ஒரு பெயர் மட்டுமாக அல்ல; சியாமிடம் விளையாடும் உயிரியற்கையின் தீராத லீலையாகவும் இருக்கிறாள். லீலாவை சியாம் நேசிக்கிறான். ஆனால், அவளிடம் அறிமுகம் கொள்வதற்கும் உறவு கொள்வதற்குமான அடையாளங்கள் எதையும் அவனால் அவளிடம் சொல்ல முடியவில்லை. அவன் யார் என்று அவள் கேட்கும்போது, “நான் ஏன் மரமாகப் பிறக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. நான் மீனாகப் பிறந்திருந்தால்தான் என்ன மோசம்” என்கிறான்.

வங்க எழுத்தாளர் சீர்ஷேந்து முகோபாத்யாய 1967-ல் வெளியிட்ட ‘குண்போகா’ என்ற நாவலின் தமிழ் வடிவம்தான் ‘கறையான்’. பல ஆண்டுகளாகப் பதிப்பில் இல்லாத இந்த நாவலை இப்போது மீண்டும் கொண்டுவந்திருக்கிறது நேஷனல் புக் ட்ரஸ்ட். மனிதனை வெறும் அலுவலக உயிரியாகச் சுருக்கிவிட்ட இருபதாம் நூற்றாண்டு எதார்த்தத்தில், அவனது உண்மையான மகிழ்ச்சியும் நிறைவும் மகத்துவமும் எதில் இருக்கிறது என்பதை இந்தியப் பின்னணியில் பரிசீலித்த மிக முக்கியமான நவீன வங்கப் படைப்புகளில் ஒன்று ‘கறையான்’.

பந்தயத்துக்கு அப்பால் உயிர்த்திருத்தலின் இனிமையை உணர்வதற்கான ஒரு சாகசத்தில் இறங்குகிறான் சியாம். தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பியின் ‘எக்சென்ட்ரிக்’ சிறுகதையை ஞாபகப்படுத்தும் கதைக்களம் இது. சரித்திரமும் சமூகமும் அரசியலும் மனிதனின் நோக்கில் செல்லாக் காசாகிவிட்ட ஒருகாலத்தில், அவன் தன்னிடமே திரும்பிவரும் கதைகளில் ஒன்றுதான் சியாமுடையது. நாவலின் இறுதியில் லீலாவின் பார்வைபட மரணம் போன்ற ஒன்றைத் தழுவுகிறான். ஆனால், மிகுந்த பரிவுடன் நிறைந்த அன்புடன் மண்ணில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டான் சியாம் என்று ஆசிரியர் முடிக்கிறார்.

நன்றி: தமிழ் இந்து, 27/3/21.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031317_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *