கரிசல்காட்டு ஜமீன்தார்கள்
கரிசல்காட்டு ஜமீன்தார்கள், முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா, பக். 270, விலை ரூ. 270.
பாளையக்காரர்கள் எனப்படும் ஜமீன்தார்கள் குறித்த நூல்கள் தமிழில் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. இந்த நூல் தென் தமிழகத்தைச் சேர்ந்த இளையரசனேந்தல், குருவிகுளம் ஜமீன்தார்களைப் பற்றியது. அந்த வகையில், இரு ஜமீன்களின் பூர்விகம், வாழ்க்கை முறை, ஆன்மிக, சமுதாயப் பணிகள் பற்றிய ஆய்வுத் தகவல்கள் சுவாரசியமான முறையில் கூறப்பட்டுள்ளது.
வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிடும் சம்பவத்தின்போது, அனைத்து பாளையக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்கள்அழைப்பு விடுத்தனர். அதைப் பார்க்கும் பாளையக்காரர்கள் அஞ்சி ஒழுங்காக கப்பம் கட்டுவார்கள் என்பதே அந்த அழைப்பின் நோக்கம். ஆனால், வீரத்தின் விளைநிலமாகத் திகழ்ந்த இளையரசனேந்தல் ஜமீன்தார் அந்த துயர சம்பவத்தைக் காண வரவில்லை.
இதனால், பிரித்தாளும் தந்திரத்தைப் பயன்படுத்தி, 14 கிராமங்களைக் கொண்ட இந்த ஜமீனை பகுதி 1, பகுதி 2 என ஆங்கிலேயர்கள் பிரித்தனர் என்ற தகவல் இளையரசனேந்தல் ஜமீனின் பலத்தை எண்ணி ஆங்கிலேயர்கள் அஞ்சியதை எடுத்துக்காட்டுகிறது.
காலண்டர்களில் உயிரோட்டமான தெய்வ ஓவியங்களை வரைந்து கொடுத்த ஓவியர் கொண்டையராஜுலுவுக்கு அடைக்கலம் அளித்து ஆதரித்தவர் இளையரசனேந்தல் ஜமீன்தார் ஆர்.எஸ்.அப்பாசாமி என்பது பலர் அறியாத தகவலாக இருக்கக்கூடும்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மிகவும் செல்வாக்குடன் திகழ்ந்த குருவிகுளம் ஜமீன் பற்றியும் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ‘இந்த ஜமீன் அரண்மனை இப்போது தீப்பெட்டி நிறுவனம் செயல்படும் இடமாக மாறியிருப்பதும், ஒரு காலத்தில் இந்த அரண்மனையில் ராஜா தர்பார் எத்துணை சிறப்பாக நடந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கும்போது தன்னையறியாமல் கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது’ என்கிறார் நூலாசிரியர். இதைப் படிப்பவர்களையும் அந்த சோகம் தொற்றிக்கொள்ளும். கட்டுரைகளுக்குப் பொருத்தமான ஏராளமான புகைப்படங்கள் நூலுக்கு அணிசேர்க்கின்றன.
நன்றி: தினமணி, 4/4/22
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000033153_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818