காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம், இசையரசியின் வாழ்க்கை பயணம், ரமணன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 264, விலை 800ரூ.

கர்நாடக இசையுலகில் நிகரற்ற கலைஞராக விளங்கிய எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூற்றாண்டையொட்டி வெளியாகியிருக்கும் அவரது வாழ்க்கைப் பயண நூல் இது.

மதுரை சேதுபதி பள்ளியின் திறந்தவெளியில் மதுரை சண்முகவடிவு வீணை வாசிக்க அவரது ஆறு வயதுக் குழந்தையான குஞ்சம்மா சற்று தொலைவில் மணல் வீடு கட்டி விளையாடுவதில் தொடங்கி, அந்த ஆறு வயதுக் குழந்தை “ஆனந்தஜா’‘ என்கிற மராட்டிய மொழிப் பாடலை முதன்முதலாக மைக்கில் பாடியது, மதுரை டி.கே. சீனிவாச ஐயங்காரிடம் இசைப்பயிற்சி பெற்றது, பத்து வயதில் இசைத்தட்டு ஒலிப்பதிவுக்காக “மரகத வடிவும் செங்கதிர் வேலும்’‘ (திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்) பாடலைப் பாடி நிறுவனத்தாரை வியப்பில் ஆழ்த்தியது, மியூசிக் அகாதமியில் பாடிய முதல் பெண் என்ற பெயர் பெற்றது, அதே அகாதெமியில் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் பாட வேண்டிய நிகழ்ச்சியில் அவர் வராததால் மேடையேறி பாடி செம்பை வைத்தியநாத பாகவதர், டைகர் வரதாச்சாரியார் போன்றோரின் பாராட்டுகளைப் பெற்றது, வீணை தனம்மாள் பரிந்துரையால் பம்பாயில் கச்சேரி வாய்ப்பு பெற்றது, கே. சுப்பிரமணியம் மூலமாக திரைப்பட அறிமுகம், சதாசிவத்தைத் திருமணம் புரிந்தது, ஐ.நா. சபையில் “மைத்தீரிம் பஜத‘’ பாடலைப் பாடியது, காந்தி விரும்பிக் கேட்டதால் “ஹரி தும் ஹரோ’‘ (மீரா பஜன்) பாடலைப் பாடியது – இப்படி எம்.எஸ். வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் கால வரிசைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளன.

கருப்பு-வெள்ளை படங்களும், வண்ணப்படங்களும் அருமை. பின்னிணைப்பாக அவரோடு பழகிய சிலரின் கட்டுரைகளும் இடம்பெற்றிருப்பது சிறப்பு. எம்.எஸ். ரசிகர்களுக்கு மட்டுமல்ல, இசை ரசிகர்கள் அனைவருக்குமே இது ஒரு பொக்கிஷம்.

நன்றி: தினமணி, 5/9/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *