கழகத் தமிழ் இலக்கணம்
கழகத் தமிழ் இலக்கணம், கழகப் புலவர் குழு, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிட்., பக்.352. விலை ரூ.265.
மொழியின் தன்மையை வரையறுத்துக் கூறுவது இலக்கணம் ஆகும். ஒரு மொழியை பிழையின்றிப் பேசவும், எழுதவும் இலக்கணம் பயில்வது அவசியமாகும். அந்த வகையில் இந்நூல் தமிழ் மொழியை பிழையின்றிப் பேசவும், எழுதவும் உதவும்விதத்தில் எழுதப்பட்டுள்ளது.
தமிழை முதன்மைப் பாடமாக எடுத்து பயிலும் மாணவர்கள் கூட இலக்கணம் என்றாலே சிறிது தயக்கம் கொள்வர். இந்நூலில் எழுத்து,சொல்,பொருள்,யாப்பு,அணி ஆகிய ஐந்து இலக்கணங்களும் இன்றைய தலைமுறை மாணவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் மிக எளிமையாகவும், சுருக்கமாகவும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
வடமொழி தாக்கத்தின் காரணமாக தற்போது பேச்சு மற்றும் எழுத்து வழக்கில் உள்ள பல சொற்களின் மாற்றங்களை நூல் சுட்டிக் காட்டுகிறது. அனைத்து நிலைகளிலும் அவற்றைத் திருத்த மேற்கொள்ளும் வழி முறைகளையும் இந்நூல் விளக்கி கூறுகிறது.
இலக்கணத்தை எளிமையாக புரிந்து கொள்ளும் விதமாக தொகுக்கப்பட்ட இந்நூலில், தொல்காப்பியம், நன்னூல் உள்ளிட்ட இலக்கண நூலில் இடம் பெற்றுள்ள நூற்பாக்களை மேற்கோள் காட்டியிருப்பது சிறப்பு. மேலும், இலக்கியங்கள், தற்கால பேச்சு மற்றும் எழுத்து வழக்குகளையும் ஆராய்ந்திருப்பது குறிப்பிடத் தக்கது.
தமிழறிஞர்கள், ஆய்வு மாணவர்கள், பத்திரிக்கை துறையில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமின்றி, அரசு பணியாளர் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் ஆகியோருக்கு தமிழ் இலக்கணம் குறித்து முழுமையாகவும், எளிமையாகவும் தெரிந்து கொள்ள இந்நூல் உதவும்.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
நன்றி: தினமணி, 7/5/2018.