கழிந்தன கடவுள் நாளெல்லாம்
கழிந்தன கடவுள் நாளெல்லாம், தென்னம்பட்டு ஏகாம்பரம், பக். 136, விலை 125ரூ.
‘ஆலயம் சென்று ஆண்டவனை வழிபடுவதெல்லாம், விளையாட்டுப் பருவத்தில் ஆன்மிகம் முளைவிடுமறும் வழி என்று கூறும் இந்நூலாசிரியர், ஆரம்பத்தில் இறை மறுப்பு சிந்தனைக்கு ஆட்பட்டு 1972-74 வரை ‘முரசொலி’ நாளேட்டில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். அதன் பிறகு ஹிந்து சமய அறநிலையத் துறையில் பணியாற்றி, உதவி ஆணையராக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றவர்.
‘அழிவற்ற பரம்பொருளே பிரம்மம். அதன் இயல்பை அறிதலே ஆத்மஞானம்’ என்கிறது பகவத்கீதை. ஆனால், நாமே ஆத்ம ஞானத்தை அறிய வேத நூல்களிலும், கோயில்களிலும், ஆசார அனுஷ்டானங்களிலும் தேடி அலைகிறோம். இவை ஒரு போதும் மெய்ஞானத்தை அளித்ததில்லை’ என்று கூறும் ஆசிரியர், இதற்கு உண்மையான குரு கட்டாயம் தேவை என்கிறார்.
இக்காலத்திலும் அத்தகைய மகான்கள் உள்ளனர். ஆனால் மீடியா மற்றும் விளம்பரங்கள் மூலம் நம்மை அணுகும் ஆன்மிகச் சொற்பொழிவாளர்கள், யோகா கற்பிப்பவர்கள், சித்து ஹோமம் நடத்துபவர்கள் எல்லாம் குரு ஆகிவிடமாட்டார்கள். உண்மையான குருவைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்றும், அத்தகையோரின் அடையாளங்கள் மற்றும் செயல்பாடுகள் எப்படிப்பட்டவை என்பதையும் ‘குருதரிசனம்’ என்ற கட்டுரையில் விவரிக்கிறார்.
மானிடப் பிறப்பின் மகத்துவ்ம், மெய்ஞானத்தின் மேன்மை, உடல் – மனம் – ஆன்மாவின் ரகசியம் இப்படி இந்நூலில் 14 கட்டுரைகளில் எளிய நடையில் ஆன்மிகம் விவரிக்கப்படுவது பரவசப்படுத்துகிறது.
-பரக்கத்
நன்றி: துக்ளக், 5/10/2016.