கோவை ஞானியின் திறனாய்வு நெறி

கோவை ஞானியின் திறனாய்வு நெறி (வாசிப்பும் மதிப்பீடும்),  தொகுப்பாசிரியர்கள்: க.ஜவகர், கு.முத்துக்குமார், சோ.பிலிப்சுதாகர், புதுப்புனல், பக். 160, விலை ரூ.200

கலை, இலக்கியம், தத்துவம் சார்ந்த தனது தனித்தன்மையான பார்வைகளை முன் வைக்கும் கோவை ஞானியின் நாவல், கவிதை, மெய்யியல் தொடர்பான கருத்துகளை விரிவாக எடுத்துக் கூறி அவற்றைப் பற்றிய சிந்தனைகளைத் தூண்டுவிதமாக எழுதப்பட்ட 11 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்திருக்கிறது.

இலக்கியம், கோட்பாட்டு விவாதங்கள் மனித விடுதலையை நோக்கியதாக அமைய வேண்டும் என்பதே ஞானியின் இலக்கியத் திறனாய்வு நெறியாகும். அவரிடம் மார்க்சியம் மண்ணுக்கேற்ற மார்க்சியமாக, தமிழ் மார்க்சியமாக, தமிழ் மெய்யியலாக இரண்டறக் கலந்ததாக மாறியிருப்பது இயல்பானதே என்று ஞானியின் திறனாய்வு நெறியை விளக்குகிறது ஒரு கட்டுரை.

சம்பவங்களைச் சொல்வதல்ல நாவல். சம்பவங்களின் சாராம்சத்தின் வழி வேறொன்றைப் படைத்து வாழ்க்கைக்குப் புதிய அர்த்தங்களைக் கொடுப்பவனே படைப்பாளி என்பது ஞானியின் நாவல் பற்றி பார்வையாகும்.

ஞானியைப் பொருத்தவரை கவிதை அல்லது இலக்கியத்திற்குள் இயங்கும் படைப்பியக்கம் அல்லது கவித்துவம்தான் பழங்கவிதை, புதுக்கவிதை ஆகியவற்றை இணைக்கின்ற நீரோட்டம் ஆகும்.

இந்திய சமயங்களுக்குள் மார்க்சியம் பயணிக்கும்போதுதான் அது மண்ணுக்கேற்ற மார்க்சியமாக மலர முடியும் என்கிறார் ஞானி. மார்க்சியம், பெரியாரியம், தமிழ்த்தேசியம் ஆகிய மூன்றும் ஓரணியாகத் திரள வேண்டும் என்பது ஞானியின் விருப்பமாக உள்ளது. இவ்வாறு ஞானியின் சிந்தனைகளைப் பற்றிய கருத்துகளை அறிமுகப்படுத்தும்விதமாக, திறனாய்வு செய்யும்விதமாக இந்நூல் அமைந்திருக்கிறது.

நன்றி: தினமணி, 26/8/19

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *