குணங்குடி மஸ்தான் சாஹிப்
குணங்குடி மஸ்தான் சாஹிப், நாகூர் ரூமி; கிழக்கு பதிப்பகம், பக்.96; ரூ.120;
இந்திய சூஃபிகள் வரிசையில் வெளியிடப்பட்டுள்ள நூல், குணங்குடி மஸ்தான் சாஹிப்.
இஸ்லாமியராக இருந்தபோதிலும் மதங்களுக்கு அப்பாற்பட்ட ஞானியாக வாழ்ந்து மறைந்தவர் சுல்தான் அப்துல் காதிர் என்ற இயற்பெயரைக் கொண்டவரான குணங்குடி மஸ்தான் சாஹிப். அவரை மிகச் சரியாகப் புரிந்துகொண்டு கிடைக்கப் பெற்ற தரவுகளைத் தேவையானஅளவு பயன்படுத்தித் தக்க விதத்தில் முன்வைத்துள்ளார் ரூமி.
அரபு உலக ஞானிகளுடன் ஒப்பிட்டுத் தொடங்கும்நாகூர் ரூமி, மருத்துவமும் மகத்துவமும் தமிழும் கலந்துறையும் சித்தராக மஸ்தான்பார்க்கப்படுவதைக் குறிப்பிடுகிறார். திருமூலர், சிவவாக்கியர், பட்டினத்தார் வரிசையில் மஸ்தானை வைத்துப் பார்க்கும் அவர், அதற்காக நூல் நெடுக மஸ்தான் சாஹிபின் பல பாடல்களை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடுகிறார்.
மஸ்தான் சாஹிபின் சுருக்கமான வாழ்க்கை வரலாற்றுடன், அவருடைய ஆன்மிக வாழ்வின் நிகழ்வுகளும், அற்புதங்களும் ஆற்றொழுக்காகச் சொல்லப்படுகின்றன, ஆங்காங்கே அவருடைய பாடல் வரிகளுடன், மஸ்தான் சென்ற இடங்களின் சிறப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மதுரை மீனாட்சி கோயிலில் நடந்தவையும் மீனாட்சியம்மை பற்றி அவர் பாடிய பாடலும் எளிய வாசகனுக்குரிய மஸ்தான் பற்றிய பார்வையை மேலும் விசாலப்படுத்தக் கூடியவை.
குணங்குடி மஸ்தான் பற்றியும் அவருடைய தலைசிறந்த திருப்பாடற்திரட்டுப் பற்றியும் அறியாதவர்களையும், ஓரளவே அறிந்தவர்களையும் மேலும் தேடிப் பிடித்து அவரைப் பற்றிப் படிக்கத் தூண்டுவதாக இருக்கிறது இந்த நூல்.
நன்றி: தினமணி, 15/3/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/9788194865308_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818