குண்டலகேசி (புதிய காப்பியச் சுருக்கம்)

குண்டலகேசி (புதிய காப்பியச் சுருக்கம்),  இரா.இளங்குமரனார், தெளிவுரை: இளவரச அமிழ்தன், சிங்காரம் பதிப்பகம், பக்.240, விலை ரூ.275.

ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று நாதகுத்தனார் இயற்றிய குண்டலகேசி. இது பெளத்தம் சார்ந்த காப்பியம். கள்வனை விரும்பி மணக்கும் வணிகர்குலப் பெண்ணான குண்டலகேசி, ஒரு நாள் விளையாட்டாக அவனைக் கள்வன் எனக் கூறிவிட, அன்றிலிருந்து அவர்கள் உறவு ஒட்டா உறவாகிறது. இதனால், தன்னைக் கொல்ல முயன்ற கணவனை அவள் கொன்றுவிட்டு, பிக்குணியாகி, பெளத்த சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபடுகிறாள் குண்டலகேசி.

குண்டலகேசி எனும் பெயரையே தம் புதிய காப்பியத்திற்குச் சூட்டி, 672 செய்யுள்களில் சந்தம் அமைத்துப் பாடியுள்ளார் புலவர் இளங்குமரனார். இச்செய்யுட்களுக்கு இளவரச அமிழ்தனார் எழுதியுள்ள சுருக்கமான தெளிவுரை எளிமையானது.

புதிதாகப் புனைந்துரைக்கப்பட்டுள்ள இந்தக் குண்டலகேசியின் கதையும் நாதகுத்தனாரின் குண்டலகேசியின் கதையை அடியொற்றியே இறுதி வரை செல்கிறது. மகா வணிகனின் மகளாக வரும் அன்னம் பத்திரை என்ற குண்டலகேசி (கேசி), கணவன் (காளன்) இறந்த பிறகு தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்கிறாள்.

அப்போது, துறவோர் சாலைத் தலைவி கூறும் கெண்டைவிழி-இன்சொலன் என்பாரது கதையால் மனம் மாறுகிறாள். இன்சொலன் கெண்டைவிழியிடம் உன் கவலையையும் கண்ணீரையும் பிற உயிர்களுக்குச் செய்யும் தொண்டாகவும் துணையாகவும் மாற்று; அதுவே உன் பிறவிப் பயன் என்பதைக் கேட்டு உயிரின் அருமையை உணர்ந்து, பிக்குணியாகி பிற உயிர்களுக்கு உதவுகிறாள் எனக் கதை முடிகிறது.

அழகான சந்த நடையும், எதுகை-மோனையும் அமைந்த சிறந்த செய்யுள் காப்பியம்.

நன்றி: தினமணி,3/9/2018

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

Leave a Reply

Your email address will not be published.