குறுந்தொகைப் பாடல்கள் (1-25)
குறுந்தொகைப் பாடல்கள் (1-25), குழ.கதிரேசன், ஐந்திணைப் பதிப்பகம், பக்.136, விலை 80ரூ.
குழந்தைகள் மனத்தைக் குளிர்வித்துப் பல குழந்தை இலக்கியங்களைப் படைத்த குழந்தைக் கவிஞர் குழ.கதிரேசன், இப்போது இலக்கிய இன்பம் நல்கும் நல்ல குறுந்தொகை எனப் போற்றப்படும் குறுந்தொகை பாடல்களுக்கு விளக்கம் தந்துள்ளார்.
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையில் முதல் இருபத்தைந்து பாடல்களுக்கான எளிய விளக்கத்துடன், அப்பாடல்களில் இடம்பெறும் மரம், செடி, கொடி, விலங்குகள், பறவைகள், முதல், கரு, உரிப்பொருள்களுக்கான விளக்கங்களையும் மாணவர்கள்புரிந்து கொள்ளும் வகையில் தந்திருப்பது சிறப்பு.
2500 ஆண்டுகளுக்கு முந்தைய மூல பாடல்களைக் கால வேறுபாட்டால் இன்றும் பலரால் படித்து ரசிக்க முடியவில்லை என்கிற நூலாசிரியரின் மனக்குறை, அவரால் இதற்கு முன்பே எழுதப்பட்ட சங்க இலக்கியங்கள் சிலவற்றின் உரை மூலம் தீர்ந்திருக்கிறது. அவை பல்கலைக்கழகங்களில் பாட நூல்களாகவும் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
குறுந்தொகை வரலாறு பற்றிய செய்திச் சுருக்கத்துடன், சிந்திக்கத் தகுந்த சிறந்த பாடலடிகளையும், தேர்வு வினாக்களையும் தந்து, குறுந்தொகை மூலமும் அதன் உரை விளக்கமும் தரப்பட்டுள்ளன. குறுந்தொகை முதல் பாடலிலேயே பாடபேதம் உள்ளதைச் சுட்டிக்காட்டி விளக்கியிருப்பதும்; ஒவ்வொரு பாடலுக்கும் அதைப் பாடியவர், திணை, துறை, துறை விளக்கம், பாடலின் பொருள், கூற்று, அருஞ்சொற்பொருள் விளக்கம், கருத்துரை, விளக்கவுரை, மேற்கோள் விளக்கம், குறிப்புரை ஆகியவற்றைத் தந்திருப்பதும் நூலை மெருகேற்றியுள்ளன.
தமிழ் இலக்கியத்தை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுத் தேர்வில் வெற்றி பெற இக்குறுந்தொகை ஓர் அரிய – எளிய கையேடாகத் திகழும்.
நன்றி: தினமணி, 1/4/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818