குருதியுறவு
குருதியுறவு, கமலதேவி, வாசக சாலை பதிப்பகம், பக். 126, விலை ரூ.130.
‘குருதியுறவு’, ‘பிம்பங்கள் அலையும் வெளி’, ‘ஊசல்’, ‘பூ முள்’, ‘ஒரு பந்தலின் கீழ்’ உள்ளிட்ட 17 சிறுகதைகள் அடங்கிய நூல். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகையில் புதிய வடிவமைப்பைக் கொண்டிருக்கின்றன. வட்டார வழக்கு மொழிநடையில் அமைந்திருப்பதால் சில கதைகளை ஒருமுறைக்கு இருமுறை படித்து அனுபவிக்க வேண்டும்.
பாரி வள்ளலின் மகள்களான அங்கவை, சங்கவை இருவரையும் அழைத்துச் செல்லும் புலவர் கபிலர் வரும் ‘குன்றத்தின் முழு நிலா’ கதையில் முல்லைக் கொடி மீது தனக்கு ஏன் பற்று ஏற்பட்டது என்பதை மன்னன் பாரி கூறும் இடம் அலாதியானது. பஞ்சாயத்து, குத்தகை , பைசல் என பேசும் ‘குருதியுறவு’ கதையில் ‘பொறப்பால சாதி சனத்துல வேறுபட்டுப் போயிட்டேன். வார்த்தையாலை உங்கக்கூட இருந்துக்கறேன்’ என்று மூர்த்தி கூறும் இடம், ‘ பொறுத்தவன் பூமிக்கு; திமிறுவனவன் சாமிக்கு’ என்று ருக்மணி பேசும் இடங்கள் பசுமரத்தாணிகள்.
‘ மீண்டும் கண்ணெட்டும் தூரத்தில் அமுதாவானாள்’ (ஒரு பந்தலின் கீழ்), ‘கல்லூரி நூலகக் கடிகாரத்தின் ஊசல், சட்டியில் பயறை வறுக்கும் கரண்டியென இட வலமாக ஆடிக் கொண்டிருந்தது’ (ஊசல்), ‘புழுதி மங்கலாக்கிய சாலையில் மதிய வெயிலில் பசியுடன் விழி நடந்தாள்’ (ஓயாத அலை) .
‘நிலவொளி படர கொம்புகளை மட்டும் தீட்டிய ஓவியமாய் புளியஞ்சோலை மாற அவர்கள் அதைக் கடந்து கொண்டிருந்தார்கள்’ என்பன போன்ற வாக்கியங்கள் புதியவை. பதினேழு சிறுகதைகளிலும் மோரினுள் உறைந்த பால்போல் பொதிந்திருக்கின்றன அதன் சிறப்பியல்புகள்.
நன்றி: தினமணி, 06-04-2020.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818