சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன்
சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன், கே.மகாலிங்கம், மூன்றெழுத்து பதிப்பகம், பக். 456, விலை ரூ.400.
மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் உதவியாளராக 1972 – ஆம் ஆகஸ்ட் மாதத்தில் சேர்ந்து 1987 – ஆம் ஆண்டு டிசம்பர் எம்.ஜி.ஆர். மறையும் வரை அவருடன் நெருக்கமாக இருந்தவர் நூலாசிரியர் கே.மகாலிங்கம்.
எம்.ஜி.ஆர். என்ற தலைவரின், ஆட்சியாளரின், தனிமனிதரின் சிறப்புகளைக் கூறும் இந்நூல் பலரும் அறியாத தகவல்களின் கருவூலமாக உள்ளது. 1972 – இல் தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டது, அதற்காக கருணாநிதி மேற்கொண்ட செயல்கள், தமிழக மக்கள் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக நின்றது, அதே ஆண்டு அக்டோபர் மாதம் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வைத் தொடங்கியது, கட்சி தொடங்கிய பிறகு மக்களைச் சந்திக்க எம்.ஜி.ஆர். பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரைக்குச்சென்றது, ரயில் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் அவரைப் பார்க்க சூழ்ந்து கொண்டது, இதனால் ரயில் 12 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக மதுரையைச் சென்றடைந்தது என பல சுவாரஸ்யமான தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
தன் கீழ் பணி செய்கிறவர்களை தன் குடும்பத்தில் ஒருவராகப் பார்க்கும் எம்.ஜி.ஆரின் பண்பை விளக்கும் பல சம்பவங்கள் நெகிழ வைக்கின்றன. நூலாசிரியரின் தங்கைகளின் திருமணங்கள், நூலாசிரியரின் திருமணம் ஆகியவற்றை எம்.ஜி.ஆர்.நடத்தி வைத்தது குறிப்பிடத்தக்கவை.
பொங்கலின்போது எம்.ஜி.ஆர். போனசாக தனது உதவியாளரான நூலாசிரியருக்குப் பணம் கொடுத்தது, ஆனால் புது ஆடை அணியாமல் நூலாசிரியர் வந்ததற்காக எம்.ஜி.ஆர். அவரைக் கடிந்து கொண்டது, குடும்பத்தினருக்கு புத்தாடை வாங்கிக் கொடுத்ததால் தனக்குப் புத்தாடை வாங்க பணம் இல்லாமற் போனதை நூலாசிரியர் கூறியதும் எம்.ஜி.ஆர். உடனே மேலும் பணம் கொடுத்தது என பல சம்பவங்கள் எம்.ஜி.ஆர். என்ற பலரும் அறியாத உயர்ந்த மனிதனை அறிமுகப்படுத்துகின்றன.
1967 இல் எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை சுட்டதனால் சிறைத் தண்டனை அனுபவித்து விடுதலையானார். 1973 – இல் பெரியார் மறைவின்போது, எந்தப் பகை உணர்ச்சியும் இல்லாமல் எம்.ஆர்.ராதாவிடம் வழக்கம்போல் எம்.ஜி.ஆர். பேசியது, ‘அவருடைய பகைவனுக்கும் தெய்வப் பண்பைக் காட்டுவதாக’ நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். எம்.ஜி.ஆரின் மறைவு காலம் வரை நிகழ்ந்த பல சுவாரஸ்யமான நிரம்பிருக்கின்றன இந்நூல்.
நன்றி: தினமணி, 06-04-2020.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818