புதிதாய்ப் பிறப்போம்! சரித்திரம் படைப்போம்!

புதிதாய்ப் பிறப்போம்! சரித்திரம் படைப்போம்!, அ.முகமது அப்துல்காதர், கற்பகம் புத்தகாலயம்,  பக்.160, விலை ரூ.120. 

ஒரு மனிதர் என்று சாதனை படைக்கிறாரோ அன்றுதான் அவர் பிறந்ததாக கருத வேண்டும் என்கிறார் அப்துல்கலாம். அந்த கருத்தையே தலைப்பாகக் கொண்டுள்ளது இந்த நூல்.

‘வாழ்க்கை கடினமானதுதான் ஆனால் வெற்றிக்கான வழி அங்கேதான் இருக்கிறது’ என்கிறார் புகழ் பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். ‘வலிகளை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்கிறார் புத்தர். ‘வலிகளால் நிரப்பப்பட்டதுதான் வாழ்க்கை . அதை திறம்பட கையாளுவதன் மூலம் தொடர்ந்து சாதனைகள் படைக்கலாம்’ என்கிறார் நூலாசிரியர்.

வாழ்வில் வெவ்வேறு சூழல்களில் பல்வேறு தடைகளைத் தாண்டி வெற்றி பெற்ற 25 சாதனையாளர்கள் குறித்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கும்பகோணத்தில் பிறந்து ராஜஸ்தானில் வளர்ந்த மாளவிகா கடந்த 2002-ஆம் ஆண்டு எதிர்பாராத வெடி விபத்தில் சிக்கினார். அதில் கைகள், கால்கள் பாதிக்கப்பட்டபோதும் வீட்டுக்கள் முடங்காமல் மன உறுதியோடு போராடி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தனித்தேர்வர்களில் மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்தார். அதற்குப் பிறகு உயர் கல்வியில் சிறந்து விளங்கி மாற்றுத் திறனாளிகளுக்கான பயிற்சி மையத்தை நடத்தியதோடு ஐநா சபையில் மாற்றுத் திறனாளிகளின் முன்னேற்றம் குறித்து உரையாற்றினர். அவருக்கு ‘சாதனைப் பெண்மணி விருது’ குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது. இதேபோன்று சிறு வயதிலிருந்து தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்தாலும் துவளாமல் தடைகளைக் கடந்து அமெரிக்காவின் ஜனாதிபதியாக உயர்ந்த ஆபிரகாம் லிங்கன், தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு புதுமையான முயற்சிகளோடு ‘அலிபாபா’ என்ற மிகப்பெரிய நிறுவனத்தை உருவாக்கிய ஜாக்மா என அத்தனை அத்தியாயங்களிலும் தடைகளை உடைத்து முன்னேறியவர்களின் கதை எளிய நடையில் விவரிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் வாழ்வில் அவ்வப்போது ஏற்படக் கூடிய சவால்களை துணிச்சலுடன் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை வேண்டும். அந்த வகையில் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தக் கூடிய சிறந்த வழிகாட்டியாக இந்த நூல் இருக்கிறது.

நன்றி:தினமணி, 13-04-2020


இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609


இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *