ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்
ஆதிச்சநல்லூர் ஆய்வுகள், முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா, பக்.343, விலை ரூ.350.
திருநெல்வேலி -திருச்செந்தூர் சாலையில் ஆதிச்சநல்லூர் பரம்பு என்றழைக்கப்படும் 114 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கே ஜெர்மனியைச் சேர்ந்த சாகோர் என்பவர் செய்த ஆராய்ச்சிகளின் விளைவாக பல அரிய உண்மைகள் வெளிவந்தன. அதைப் பற்றி விரிவாக இந்நூல் எடுத்துக் கூறுகிறது.
ஆதிச்ச நல்லூரில் தொல்லியல்துறையினர் 3 கட்டங்களாக அகழாய்வு செய்தனர். அவ்வாறு அகழாய்வு செய்யும்போது நிறைய தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளின் அருகே சிறிய மண்குடங்கள், குவளைகள், மூடிகள், தீப கிண்ண ங்கள், இரும்பு ஈட்டிகள், சமையல் பொருட்கள் கிடைத்தன. அதுமட்டுமல்ல, தாழிகளுக்குள் மக்கிய நிலையில் எலும்புத் துண்டுகளும் கிடைத்தன. இறந்தவர்களை தாழிக்குள் வைத்து அடக்கம் செய்யும் முறை அக்காலத்தில் இருந்திருக்கிறது. இந்தத் தாழிகளில் பிராமி சித்திர எழுத்துகள் உள்ளன.
இவை கி.மு.3000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இந்த பிராமி சித்திர எழுத்து வடிவங்களுக்கும் இலங்கையில் கண்டு எடுக்கப்பட்ட பிராமி சித்திர எழுத்து வடிவங்களுக்கும் ஒற்றுமைகள் உள்ளன. ஆசிச்சநல்லூரில் அகழாய்வு செய்யப்பட்டபோது வெண்கலப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் குவளைகள் பல உடைந்து காணப்படுகின்றன. இந்தக் குவளைகளைச் செய்ய போதிய தொழிலாளர்கள் அக்காலத்தில் இல்லாமல் இருந்திருக்கலாம்; அதனால் வெண்கலப் பொருள்களை வீட்டில் பயன்படுத்துவது மிக அரிதாகவே இருந்திருக்கலாம் என்கிறார் நூலாசிரியர்.
3000 ஆண்டுகளுக்கு முன்பே தாதுப் பொருள்களில் இருந்து இரும்பைப் பிரித்தெடுக்கும் சிறந்த அறிவைத் தமிழர்கள் பெற்றிருந்தனர் என்பதை ஆதிச்சல்லூரில் கிடைத்த கண்டுபிடிப்புகள் உறுதி செய்கின்றன என்று கூறும் நூலாசிரியர், ஆதித்தநல்லூருக்கும் சிந்துவெளியில் உள்ள ஹரப்பாவுக்கும் சுமார் 2400 கி.மீ. தூரம் இடைவெளி இருந்தாலும், 4 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே நாட்டுத் தொடர்பும், இனத் தொடர்பும், பண்பாட்டுத் தொடர்பும் இருந்திருப்பதாகக் கூறும் வரலாற்றறிஞர் ஆர்.டி.பானர்ஜியின் கருத்தையும் சுட்டிக்காட்டுகிறார்.
ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் தொடர்பான பல்வேறு அறிஞர்களின் கருத்துகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. குழந்தைகளுடன் உரையாடுவதைப் போன்ற வடிவில் மிக எளிமையாக எழுதப்பட்டுள்ள சிறந்த வரலாற்று நூல்.
நன்றி: தினமணி, 06-04-2020.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818