குழந்தைப் பருவத்து நினைவுகள்

குழந்தைப் பருவத்து நினைவுகள், தெ.வி.விஜயகுமார், சங்கமித்ரா சுற்றுச்சூழல் கல்வி மற்றும் முன்னேற்ற அறக்கட்டளை, பக். 113.

மனிதனின் வாழ்நாளில் குழந்தைப் பருவம் பலருக்கு வரமாகவும், பலருக்கு சாபமாகவும் அமைந்து விடுகிறது. இந்த வேறுபாட்டிற்கு பெரும்பாலும் முதன்மையான காரணம் பொருளாதார பலமும், பலவீனமுமே. பொருளில்லார்க்கு இவ்வுலகு முற்றிலுமாக இல்லை என்பதை உணர்ந்து உழைத்து மீண்டெழுந்தவர் பலர்; எழாது வீழ்ந்தோரும் பலர்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து மீண்டெழும் ஒரு சாமானியரின் அல்லல் மிக்க இளமைக் காலத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்நுால்.

போதுமான வருவாய் இல்லாத நோயாளித் தந்தைக்கு, ஐந்து குழந்தைகளில் ஒருவராகப் பிறந்து, இளம் வயதிலேயே தந்தையை இழந்து, அரவணைக்க யாருமின்றி, கருணை இல்லத்தில் சேர்ந்து, பல கடினமான சூழல்களில் பிறர் தயவிலேயே, 10ம் வகுப்பு வரை படித்து, பிறகு உதிரி வேலைகளுக்குச் சென்று சம்பாதித்து முன்னேறி, தொலைதுாரக் கல்வியில் மேற்கொண்டு பயின்று வாழ்வை அமைத்துக் கொண்ட நுாலாசிரியரின் குழந்தைப் பருவ நினைவுகளின் பதிவு இந்நுால்.

வறுமை, அறியாமை என இரண்டுக்குமிடையே இடிபட்டு, உண்ண உணவுக்கும், உடுத்த உடைக்கும் ஓயாமல் போராடும் சிறுமையான சூழலில் கணவரை நோய்க்குப் பறிகொடுத்து, ஐந்து குழந்தைகளைக் கரையேற்ற நொடிந்த ஒரு தாயின் மன உறுதியைக் கண்டு மனம் கசிகிறது.

கொடிய வறுமையில் ஊர் ஊராகப் புலம் பெயர்ந்து சென்றதையும், தந்தை மறைந்ததும் நிர்கதியாகித் தவித்து அன்பு இல்லத்திற்குச் செல்ல ஒரு தகரப் பெட்டியும் இல்லாமல் தத்தளித்து நின்றதையும் குறிப்பிட்டு, கல்வி கற்பித்து, தன் கல்வி எனும் வேள்விக்கு உயிர் கொடுத்து, நெஞ்சத்தில் நாட்டுப்பற்றை விதைத்து, ஜாதி மதம் கடந்து நேசமும் காட்டிய ஆசிரியர்களின் பெயர்களை நன்றியோடு பதிவு செய்கிறார்.

இளம் பருவத்தில் மகுடேசுவரர் கோவில் பணியாளர்கள் காட்டிய அன்பு, தேவாரம், திருவாசகம் கற்றுக் கொண்டது, கால்வாய்களில் குதித்து உல்லாசமாக நீச்சலடித்தது, சுடுகாட்டைத் தாண்டி இருந்த நாவல் மரங்களில் ஏறி பழங்கள் பறித்தது, அரிச்சந்திர புராணம் கேட்டு அழுதது, புகளூர் காகித ஆலையில் உடல் நோக வேலை செய்தது என அனைத்தையும் குறிப்பிட்டு நெகிழும் நுாலாசிரியர், கோவை மாவட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் துறையில், குழந்தைகள் நலக்குழு உறுப்பினராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டு பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

– மெய்ஞானி பிரபாகரபாபு

நன்றி: தினமலர், 20/10/19.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *