லாபம் தரும் பட்ஜெட்

லாபம் தரும் பட்ஜெட், விகடன் பிரசுரம், பக். 168, விலை 115ரூ.

பசுமை விகடனில் பல வாரங்கள் தொடராக வெளிவந்து விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம்.

நெடுங்காலமாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வந்த நாம், இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் விவசாயம் செய்ய ரசாயன உரங்களைப் பயன்படுத்த தொடங்கினோம். இதன் காரணமாக, உணவு தானியங்களிலும், காய்கறிகளிலும் நஞ்சு கலக்கப்படுவதுடன், மண்ணின் இயற்கைத் தன்மையும் மாறி வருகிறது.

ரசாயனப் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, இயற்கை விவசாயத்தை நோக்கி விவசாயிகள் பயணப்படுவதற்காக பல்வேறு முயற்சிகளை தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மேற்கொண்டார்.

இவரைப் போலவே இந்தியா முழுவதும் பயணப்பட்டு இயற்கை விவசாயத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், செலவு எதுவும் இல்லாமல் (ஜீரோ பட்ஜெட்) விவசாயம் செய்வது எப்படி என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருபவர்தான் சுபாஷ் பாலேகர்.

தமிழகத்தில் ஈரோடு, திண்டுக்கல், கோவை போன்ற நகரங்களில் இவர் நடத்திய பயிற்சி பட்டறைகளில் பங்கேற்று இயற்கை விவசாயத்துக்கு பல விவசாயிகள் மாறி உள்ளனர்.

அவர்களின் அனுபவத் தொகுப்பு தான் இந்தப் புத்தகம். உரிய படங்களுடன் சிறப்புற வடிவமைக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி, 28/11/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *