உரையாசிரியர்களின் உரைவளம்

உரையாசிரியர்களின் உரைவளம், கண்ணகி கலைவேந்தன், தமிழய்யா வெளியீட்டகம், பக். 480, விலை 500ரூ.

கரந்தை தமிழ்ச்சங்கமும், திருவையாறு கல்விக்கழகமும் நடத்திய அனைத்துலக உரைநடைத்தமிழ் 14ஆவது ஆய்வு மாநாட்டின் கட்டுரைத் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ள இந்நூலில் 80 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

இலக்கணம், இலக்கியம், தற்கால உரைநடை முன்னோடிகள் என 3 பிரிவுகளாகக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

மொழி என்பது மக்களின் தொடர்பியல் சாதனமாக உள்ள நிலையில், காலத்திற்கேற்ப மக்கள் அம்மொழிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். மொழிகளின் கால தூதுவர்களாகவும், இணைப்புப் பாலமாகவும் திகழ்பவர்களே உரையாசிரியர்கள் என்பது பொதுவான கருத்து.

தமிழ்மொழியில் உரையாசிரியர்களின் பிதாமகனாகக் கருதப்படும் நக்கீரர் முதல் 20 ஆம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற மேடைச் சொற்பொழிவாளராகக் கருதப்படும் கிருபானந்தவாரியார் வரை, இந்நூலில் அனைத்து உரையாசிரியர்கள் பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

இலக்கண உரையாசிரியர்கள் பற்றிய கட்டுரையில் இறையனார், இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலிய உரையாசிரியர்கள் பற்றிய குறிப்புகள் திரும்பத் திரும்ப அனைத்துக் கட்டுரைகளிலும் இடம் பெறுவது படிப்போரைச் சலிப்படையச் செய்கிறது.

இலக்கியத்துக்கான உரையாசிரியர் பிரிவில் “புலவர் குழந்தையின் திருக்குறள் உரையின் வரலாற்று நிகழ்ச்சிகள்’ எனும் கட்டுரையில், உரையாசிரியர்கள் எப்படி வரலாற்று ஆசிரியர்களாக இருக்கிறார்கள் என்பது எடுத்துக்காட்டப்பட்டிருப்பது சிறப்பாகும்.

“திருப்புகழ் உரை வேந்தர் வாரியார் சுவாமிகள்“ எனும் கட்டுரையில் கிருபானந்தவாரியாரின் இலக்கிய முகப்பை வெளிப்படுத்தியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது.

நன்றி: தினமணி, 05/12/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *